aakkam movie review

ஆக்கம் விமர்சனம்

மதுரையை மையப்படுத்தி சுத்திக் கொண்டிருந்த தமிழ் சினிமா சமீப காலமாக வட சென்னை பக்கம் திரும்பியிருக்கிறது.

ரவுடியிசம், பாக்சிங், அடி, உதை, தாதா வாழ்க்கை என வட சென்னையை ஓவராகவே காட்டி தவறாக சித்தரிக்கிறார்களோ என்ற பயம் வந்துவிடுகிறது.

இந்தப் படமும் மீண்டும் ஒரு வட சென்னை ரவுடியிசப் படம்தான். மொத்தமாக கொலை, கஞ்சா, கற்பழிப்பு, செயின் பறிப்பு என இருக்கும் அத்தனை கெட்ட விஷயங்களையும் படத்தில் காட்டும் இயக்குனர் வேலுதாஸ் ஞானசம்பந்தம் படிப்பின் முக்கியத்துவத்தையும் காட்டி கொஞ்சமே கொஞ்சம் நல்ல பெயரையும் சேர்த்துக் கொள்கிறார்.

சதீஷ் ராவன் மற்றும் அவரது நண்பர்கள் செய்யாத வேலைகளே இல்லை. செயின் பறிப்பு, கொலை, கொள்ளை, என அனைத்து கெட்ட வேலைகளுக்கும் சளைக்காதவர்களாக இருக்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பெரிய கொள்ளையை நடத்தும் போது, கொலையும் செய்து விடுகிறார்கள். அந்தக் கொலை சம்பவமும், சதீஷ் ராவனை ஒருதலையாகக் காதலிக்கும் டெல்னா டேவிஸ் காதலும், சதீஷ் ராவன் வாழ்கைகையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு சாவு வீட்டுக்கு முன்பு குத்தாட்டம் ஆடும் அசைவுகளிலேயே பொறுக்கித்தனமான இளைஞனனை கண்முன் கொண்டு வந்து விடுகிறார் சதீஷ் ராவன். அந்த ஆட்டம், கண்டிப்பாக டான்ஸ் மாஸ்டர் கற்றுக் கொடுத்ததாக இருக்க முடியாது, உள்ளிருந்து தானாக வரும் ஆட்டம்தான். அப்படியே படம் முழுவதும் நடித்தும் இருக்கிறார் சதீஷ். வசன உச்சரிப்பில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. ஆக்ரோஷமான கதாபாத்திரங்களுக்கு ஒரு புதுமுக நடிகர் ரெடி.

டெல்னா டேவிஸ் படத்தின் கதாநாயகி. இடைவேளை வரை சதீஷைக் காதல் கணைகளால் தொடுக்கிறார். அதன் பின் காமக்கணையால் வீழ்ந்து விடுகிறார். ஏமாற்றும் இளைஞர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஏமாறும் இளைஞிகளுக்கு இது ஒரு பாடம்.

டான்ஸ் மாஸ்டர்கள் தருண் மற்றும் சுஜாதா, ரஞ்சித், வடிவுக்கரசி, தேவராஜ் என மற்ற கதாபாத்திரங்களுக்கு அதிக ஸ்கோப் இல்லை.

சென்னையைப் பற்றிய படமா, உடனே இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவைத்தான் முதலில் ஒப்பந்தம் செய்து விடுவார்கள் போலிருக்கிறது. அவரும் சளைக்காமல் இசையைத் தட்டித் தூக்கியிருக்கிறார்.

நல்ல கதையைத் தேர்வு செய்து விட்டு, சில தவறான காட்சி சித்தரிப்புகளாலும், தொடர்ச்சியான திரைக்கதை உருவாக்கம் இல்லாததாலும் தடுமாறியிருக்கிறார்கள்.