diana-champika

இளவரசியாக இருக்க விரும்பும் ‘அண்ணாதுரை’ அறிமுக நாயகி

ஒரு படத்தில் இடம் பெறும் கதாபாத்திரங்களுக்கேற்ப நடிகர், நடிகைகளைத் தேர்ந்தெடுப்பது என்பது அந்தப் படத்தின் வெற்றியில் பாதியை உறுதி செய்துவிடும் ஒன்று.

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனக்கான கதை, கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்கும் விஜய் ஆண்டனி, தனக்கு ஜோடியாக நடிப்பவர்களையும் அவருக்குப் பொருத்தமாக மிகச் சரியாகத் தேர்ந்தெடுக்கிறார்.

அப்படி ஒரு தேர்வாகத்தான் ‘அண்ணாதுரை’ படத்தின் அறிமுக நாயகி டயானா சம்பிகா இருக்கிறார்.

சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் படித்து வரும் டயானா சம்பிகா குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியாக மாறியவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. தக்கது.

ஒரு விளம்பர மாடலாக பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து வந்த டயானா ‘அண்ணாதுரை’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பாத்திமா விஜய் ஆண்டனியை சந்திக்க நேர்ந்திருக்கிறது. பிறகு ஆடிஷன் மூலம் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தன் முதல் பட அனுபவம் பற்றி டயானா சம்பிகா கூறுகையில்,

“சம்பிகா என்றால் இளவரசி என்று அர்த்தம். நான் அப்படித்தான் வாழ விரும்புகிறேன். என்னை கதாநாயகியாக தேர்ந்து எடுத்த பாத்திமா விஜய் ஆண்டனிக்கும், எனக்கு நடிப்பில் ஏற்படும் சிறு சந்தேகங்களைக் கூட பொறுமையாக விளக்கி சொன்ன விஜய் ஆண்டனி சார் ஆகியோரை வாழ் நாள் முழுவதும் மறக்கவே மாட்டேன்.

விஜய் ஆண்டனி சார் படங்கள் என்றாலே அது அனைத்து ரசிகர்களைக் கவரும் படம் என்பதால் படத்தின் வெளியீட்டை பெரிதும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். இதில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ரேவதி. பெயர் ராசியோ என்னவோ படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அந்த நல்ல பெயருக்கு இயக்குனர் சீனிவாசன் முக்கிய காரணம். இயல்பாக நடிக்க வேண்டும் என்பதில் மிக மிக தெளிவாக இருந்தார்.

ஸ்ரீதேவி மேடம் போல ஸ்டைலாகவும், நயன்தாரா மேடம் போல திரை ஆளுமையுடனும், த்ரிஷா மேடம் போல என்றும் நிலைத்து, ஐஸ்வர்யா பச்சன் போல அனைவரையும் கவரும் வண்ணம் போல திரை உலகில் நீடிக்க வேண்டும் என்பதே என் ஆசை, அது நிச்சயம் நிறைவேறும் .

நவம்பர் 30 ஆம் தேதி வெளி வரும் ‘அண்ணாதுரை’ எனக்கு மிகப் பெரிய வாழ்வை தரும்,” என்கிறார் அறிமுக இளவரசி டயானா.