SHARE
biggboss kamalhaasan

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி நேற்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இரண்டு தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஓவியா தற்கொலைக்கு முயன்றார் என்ற நிகழ்வுதான் நேற்றைய நிகழ்ச்சிக்கு விடை காணும் விதமாக அமைந்தது.

வார இறுதி நாட்களில்தான் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் வருவார் என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருந்தது.

ஓவியா நிகழ்ச்சியில் தொடர்வாரா, மாட்டாரா, மற்ற போட்டியாளர்களின் அத்து மீறல்களை அதிகம் கண்டு கொள்ளாத கமல்ஹாசன் நேற்று எப்படி நடந்து கொள்வார் என்றும் அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள்.

நேற்று அனைத்திற்குமான விடை கிடைத்தது. ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். உடல்நலத்தையும், மன நலத்தையும் கருத்தில் கொண்டு பிக் பாஸ் அவரை நிகழ்ச்சியை விட்டு விலக சம்மதம் தெரிவித்தார்.

நிகழ்ச்சியை விட்டு விலகுதவற்கு முன் கமல்ஹாசனையும் சந்தித்துப் பேசினார் ஓவியா. அப்போதும் அவர் ‘ஆரவ் ஐ லவ் யூ’ என்று சொன்னதுதான் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

நேற்றைய நிகழ்ச்சி ஒரு இக்கட்டான நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது என்பதால் பலரின் கண்களும் கமல்ஹாசனை நோக்கியே இருந்தது. இந்த வாரம் கமல்ஹாசன் மீது நிகழ்ச்சியை நேர்மையாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் ரசிகர்களிடம் இருந்தது. அனைத்திற்கும் பதிலளிக்கும் விதமாக நேற்று மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டார் கமல்ஹாசன்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே எதிர்பாராமல் மரணமடைந்த பிக் பாஸ் ஊழியருக்கு அஞ்சலி செலுத்தியவர், இந்த வாரத்தில் நடந்த ‘மன நோயளிகள் பற்றிய டாஸ்க்’ பற்றி தன் கண்டிப்பைப் பதிவு செய்வதிலும் தவறவில்லை.

“நான் செய்யாத தவறுக்கு ஒரு சின்ன மன்னிப்பைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். மனநலம் சற்றே குன்றியவர்களைப் பற்றி கேலியாக நடித்துக் காட்டப்பட்டது ரசனைக்குரியதாயில்லை. அதில் எனக்குக் கோபமே இருக்கிறது. நடந்த அந்த நிகழ்வு இனியும் நடக்காமல் இருக்க, வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இனி ஒரு முறை அது போல் நடக்குமாயின் இந்த நிகழ்ச்சி எனக்கு முக்கியமில்லை. அது அவர்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். சமுதாயக் கடமை நமக்கிருக்கிறது, உங்களுக்கிருக்கிறது, எனக்கிருக்கிறது,” என தன் கண்டிப்பைப் பதிவு செய்தார்.

அத்துடன் நிற்கவில்லை, நிகழ்ச்சி போட்டியாளர்கள் சிலருடன் தனித் தனியாகவும் உரையாடினார். நேற்று, பிந்து மாதவி, கணேஷ் வெங்கட்ராமன், ரைசா ஆகியோரிடம் வெளிப்படையாகச் சில விஷயங்களைப் பற்றி கண்டிப்புடன் கேட்டார். அது இன்று மற்றவர்களிடமும் தொடர்ந்தால் மட்டுமே, ஓவியா இல்லாத நிகழ்ச்சியில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பைச் சேர்த்து ஏதாவது அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும்.