charlie chaplin 2

பிரபுதேவா, நிக்கி கல்ரானி நடிக்கும் ‘சார்லி சாப்ளின் 2’

தமிழில் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி பட நிறுவனங்களில் ஒன்று T.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ். இந்நிறுவனம் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ படத்தைத் தயாரித்து வருகிறது.

அப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘சார்லி சாப்ளின் 2’.

2002 ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ‘சார்லி சாப்ளின்’ படத்தின் இரண்டாவது பாகமாக இப்படம் தயாராக உள்ளது. முதல் பாகம் பின்னர் ஹிந்தியில் சல்மான்கான் நடித்து ‘நோ எண்ட்ரி’, தெலுங்கில் ‘பெல்லம் ஊர் எல்தே’, மலையாளத்தில் ஜெயராம், பாவனா நடித்து ‘ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்’ கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த் நடித்து ‘அல்லா புல்லா சுல்லா’ மற்றும் போஜ்பூரி, ஒரியா, மராத்தி போன்ற இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வசூல் சாதனையை ஏற்படுத்தியது.

சார்லி சாப்ளின் முதல் பாகத்தை இயக்கிய ஷக்தி சிதம்பரமே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நாயகனாக நடித்த பிரபுதேவா இரண்டாவது பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா ஷர்மா இருவரும் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியதாவது,

“பிரபு தேவா, நிக்கி கல்ரானி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது, அதற்காக பிரபுதேவா குடும்பமும் நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்கு போகிறார்கள். போகும் போதும் அங்கு போய் சேர்ந்த பிறகும் நடக்கும் சம்பவங்களின் கலகலப்பான தொகுப்பே சார்லி சாப்ளின் 2. திருப்பதிக்கு போனா திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம் என்பது படத்தின் சஸ்பென்ஸ்,” என்கிறார் இயக்குனர்.

“உலக காமெடி மேதையான சார்லி சாப்ளினின் 125-வது பிறந்தநாள் விழா இந்த வருடம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த படம் உருவாவது அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும்,” என்கிறார் தயாரிப்பாளா் T.சிவா.
படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.