dhuruvangal-16-review

துருவங்கள் 16 – விமர்சனம்

தமிழ் சினிமாவில் யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றாமல், குறும் படங்களை மட்டும் இயக்கி இன்று தமிழ் சினிமாவில் சிறந்த படங்களைக் கொடுக்க பல இளைஞர்கள் முன் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில் இந்த ‘துருவங்கள் 16’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் குறிப்பிட்டுச் சொல்லும் இயக்குனராக வளருவார் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

எந்த முன்னணி ஹீரோக்களையும் நம்பாமல் குணச்சித்திர நடிகராக இருக்கும் ரகுமானை இந்தப் படத்தின் நாயகனாக நடிக்க வைத்ததிலேயே அவருடைய நம்பிக்கை தெரிகிறது. அதை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறார் ரகுமான்.

காவல் துறை ஆய்வாளராக இருக்கும் ரகுமான் நள்ளிரவில் நடந்த ஒரு கொலையைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார். அதே சமயம் ஒரு இளைஞனும், பெண்ணும் ரத்தக் கறை படிந்த அவர்களது வீட்டிலிருந்து காணாமல் போகிறார்கள். புதிதாக வேலைக்குச் சேர்ந்த கான்ஸ்டபிள் கௌதம் தானே முன்வந்து ரகுமானுடன் இந்த விசாரணையில் பங்கேற்கிறார். அவருடைய ஆர்வத்தைத் தடுக்காமல் ரகுமானும் கௌதமும் விசாரணையைத் துவக்குகிறார்கள். கடைசியில் அவர்கள் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பிளாஷ் பேக் முறையில் படத்தின் கதையை எந்த குழப்பமும் இல்லாமல் அருமையாக நகர்த்திக் கொண்டு செல்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். இப்படி நடந்திருக்கலாமோ, அப்படி நடந்திருக்கலாமோ என்ற காட்சிக் கோர்வைகள் கூட பார்வையாளனுக்கு எந்த குழப்பத்தையும் தராமல் நகர்கிறது. இந்த திரைக்கதை யுக்திதான் படத்திற்கு முதுகெலும்பாக அமைகிறது.

ரகுமான்தான் படத்தின் தனி பில்லர். மொத்த படத்தையும் தன் மீதே தாங்கிக் கொண்டிருக்கிறார். பிளாஷ்பேக்கில் துடிப்பான ஆய்வாளராக விசாரிப்பதிலும் சரி, பின்னர் நரை விழுந்த தலையுடன், கால் ஊனத்துடன் தன்னுடைய பழைய கதையைப் பேசுவதிலும் சரி, ரகுமானைத் தவிர அந்தக் கதாபாத்திரத்தில் வேறு யாரையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

கான்ஸ்டபிளாக வரும் கௌதம் கதாபாத்திரம் பற்றிய சஸ்பென்ஸ் நாம் சிறிதும் எதிர்பார்க்காத ஒன்று. சில கேள்விகளுக்கான விடைகள் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருவதைக் காட்சிப்படுத்துவதில் அதிக கவனம் தேவை. அதை அனுபவம் வாய்ந்த இயக்குனர் போல கார்த்திக் கையாண்டிருக்கிறார்.

கிளைமாக்சில் மட்டும் யார் யாரைத் துரத்துகிறார்கள், யார் யாரைக் கொல்கிறார்கள் என்பது புரியவில்லை. இரவு நேரக் காட்சியில், புதுமுகங்கள் வேறு நடித்திருப்பதால் அந்தக் குழப்பம் வருகிறது. உடைகளிலாவது வித்தியாசம் காட்டியிருக்கலாம்.

இருந்ததலும் சில சிறிய குறைகளையும் மீறி வருடக் கடைசியில் வெளிவந்துள்ள இந்த ‘துருவங்கள் 16’ ஒரு இளைஞரின் துணிச்சலான முயற்சி.