SHARE
Enga Amma Rani Review And Rating - Screen4screen

உலகத்தில் ஈடு இணையற்ற ஒன்று எது என்று கேட்டால் அனைவருமே அம்மா பாசம் என்றுதான் சொல்வார்கள்.

அம்மாவின் பாசத்தை வேறு எந்த ஒன்றாலும் மிஞ்ச முடியாது. அம்மா பாசத்தை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் இந்த ‘எங்க அம்மா ராணி’ யின் பாசம் அளவு கடந்த, எல்லையில்லாத ஒன்று. இப்படியும் ஒரு அம்மா தியாகம் செய்வாரா என ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பாணி.

‘கபாலி’ படத்தில் கூட மலேசியாவை இந்த அளவிற்குக் காட்டவில்லை என்று சொல்லலாம். இந்தப் படத்தில் மலேசியா மற்றும் கேமரன் மலை ஆகிய இடங்கள் தனி அழகுடன் தெரிகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தன்ஷிகாவும், அவருடைய கணவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டு மலேசியாவில் செட்டிலானவர்கள். கம்போடியோவிற்கு வேலை விஷயமாகச் சொன்ற தன்ஷிகாவின் கணவர் காணாமல் போய்விடுகிறார். தன்னுடைய இரட்டை மகள்களை வைத்துக் கொண்டு செய்வதறியாது நிற்கிறார் தன்ஷிகா.

பாஸ்போர்ட் பிரச்சனை காரணமாக ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குச் சேர்ந்து கொஞ்சம் சமாளிக்கிறார். ஒரு நாள் திடீரென அவருடைய இரட்டை மகள்களில் ஒருவர் திடீரென இறந்து போகிறார். அதற்குக் காரணம் ஒரு வித்தியாசமான நோய் என டாக்டர் சொல்கிறார். ஆனால், தன்ஷிகா அதை நம்ப மறுக்கிறார். அந்த நோய் இரட்டை மகள்களில் உயிரோடு இருக்கும் மற்றவருக்கும் வந்திருக்குமோ என டாக்டர் சோதனை செய்கிறார்.  தன்ஷிகாவின் மற்றொரு மகளுக்கும் அந்த நோய் வந்திருக்கிறது. இதனால், அவரை அழைத்துக் கொண்டு குளிர் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லச் சொல்கிறார் டாக்டர்.

தன்ஷிகா, தன் மகளுடன் மலேசியாவில் இருக்கும் கேமரன் மலைக்குச் செல்கிறார். அங்கு சென்றதும், அவர் மகள் மீது ஒரு சிறுமியின் ஆவி புகுந்து கொள்கிறது. அந்த ஆவி புகுந்ததால் தன்ஷிகாவின் மகளுக்கு அந்த நோய் இல்லாமல் போகிறது. இருந்தாலும் ஆவியை விரட்ட தன்ஷிகா முடிவு செய்கிறார். ஆனாலும், சிறுமியின் ஆவி தன் நிலையைக் கூற தன்ஷிகா மனம் மாறுகிறார். மகள் நோயின் பிடியிலிருந்து மீள வேண்டும் என்ற நிலை ஒரு பக்கம், ஆவி சிறுமியின் நிலை மறுபக்கம் என தன்ஷிகா ஒரு விபரீத முடிவு எடுக்கிறார். அது என்ன என்பதுதான் பரபரப்பான கிளைமாக்ஸ்.

தனி நாயகியாக தன்ஷிகா. படம் முழுவதையும் தாங்கிக் கொள்ளும்படியான ஒரு கதாபாத்திரம். அதை நிறைவாகவே செய்திருக்கிறார். காணாமல் போன கணவன், இந்தியாவில் கணவர் வீட்டார் தொல்லை, இரட்டை மகள்களில் ஒருவரை திடீரெனப் பறி கொடுக்கும் நிலை, இருக்கும் மற்றொரு மகளை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை, அந்த மகளுக்குள் புகும் ஒரு சிறுமியின் ஆவியால் ஏற்படும் பிரச்சனை என எந்தப் பக்கம் திரும்பினாலும் சோதனை மேல் சோதனை. அனைத்தையும் தாக்குப் பிடித்து சரியாகச் செய்திருக்கிறார். கிளைமாக்சில் தன்ஷிகா எடுக்கும் முடிவு, பாசத்தின் உச்சம். படம் பார்ப்பவர்கள் திடுக்கிட்டுப் போவது நிச்சயம்.

தன்ஷிகாவின் இரட்டை மகள்களாக வர்ணிகா, வர்ஷா. இருவருமே அவ்வளவு இயல்பாய் நடித்திருக்கிறார்கள். வேறொரு சிறுமியின் ஆவி புகுந்த பின் பார்வையாலேயே மிரட்டியிருக்கிறார் இரண்டாவது மகள்.

டாக்டராக நடித்திருக்கும் சங்கர் ஸ்ரீ ஹரி, பொறுமைசாலியான டாக்டராக பொருத்தமாக நடித்திருக்கிறார். ஆரம்ப நகைச்சுவைக் காட்சிகளில் நமோ நாராயணன், கிண்டலான மனிதர்களுக்குள் ஈரம் உண்டு என நிரூபிக்கிறார்.

இளையராஜாவின் இசையில் ‘அம்மா பாடலும், மகளே பாடலும்’ உருக வைக்கும் பாடல்கள். குமரன், சந்தோஷ்குமார் இருவரின் ஒளிப்பதிவில் மலேசியாவை 120 ரூபாய் செலவில் சுற்றி வரும் இனிய அனுபவம் கிடைக்கும்.

பழி வாங்கும் பேய்க் கதைதான் என்றாலும், அதை அம்மா சென்டிமென்ட் சேர்த்து நெகிழ வைத்துள்ளார்கள். திரைக்கதையில் கொஞ்சம் வேகம் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

பிரம்மாண்டம், ஆக்ஷன், காதல் என்ற பரபரப்புகளுக்கு மத்தியில் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் படம்.