intensive comedy unit

‘இன்டென்சிவ் காமெடி யூனிட்‘ – விஜய் டிவியில் புதிய காமெடி நிகழ்ச்சி

விஜய் டிவியின் மற்றுமொரு பிரம்மாண்டமான நகைச்சுவை நிகழ்ச்சியாக ‘இன்டென்சிவ் காமெடி யூனிட்’ என்ற புத்தம் புது நிகழ்ச்சி வரும் ஜூலை 2 ஞாயிறு அன்று மதியம் 12 மணி முதல் ஆரம்பமாக உள்ளது.
‘புட் சட்னி’ என்ற பிரபலமான யூ ட்யூப் சேனலை பற்றிப் பலருக்குத் தெரிந்திருக்கும். இந்த யு டியுப் சேனலின் பிரபலங்கள் இந்த காமெடி கலக்கல் நிகழ்ச்சியை வழங்க உள்ளார்கள்.

இந்த ‘புட் சட்னி’ வீடியோக்கள் பொழுதுபோக்குடன் கருத்தும் நிறைந்ததாக இருக்கும். சமூகத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவை கலந்து சொல்வார்கள். அதுபோல இந்த ஒரு மணி நேர ‘இன்டன்சிவ் காமெடி யூனிட்’ நிகழ்ச்சியிலும் சிறு சிறு நிகழ்வுகளை நகைச்சுவை கலந்து குறும்படங்களாக தரப் போகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழில் மிகப் பெரிய தொலைக்காட்சி ஊடகத்தில் அடியெடுத்து வைக்கிறது ‘புட் சட்னி’.

‘புட் சட்னி’ யூ ட்யூப் சேனலின் பிரபல முகங்கள் தான் இந்த ‘இன்டன்சிவ் காமெடி யூனிட்’ நிகழ்ச்சியிலும் இடம் பெறுவார்கள்.

யு டியூப் சேனலிலிருந்து விஜய் டிவிக்கு பிரமோஷன் பெற்று வந்துள்ளார்கள் ‘புட் சட்னி’ பிரபலங்கள்.

யு டியூபில் கலக்கியவர்கள் டிவியில் கலக்குவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.