julie-2

நடிகையின் உண்மைக் கதையா ‘ஜுலி 2’ ?

தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார்.

அவர் ஹிந்தியில் முதல் முறையாக அறிமுகமாகும் ‘ஜுலி 2’ படம் நாளை தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகிறது. இப்படத்தில் ராய் லட்சுமி மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார் என படத்தின் புகைப்படங்களும், போஸ்டர்களும் காட்டியுள்ளன.

ஆனால், இது பற்றி பேசிய ராய் லட்சுமி, “படத்தின் டிரைலரையும், புகைப்படங்களையும் பார்த்துவிட்டு மட்டும் பலர் அது மாதிரி சொல்கிறார்கள். ஆனால், படத்தைப் பார்த்த பிறகு எனது கதாபாத்திரம் மீது அனைவருக்குமே அனுதாபம் வரும். அப்பா இல்லாத ஜுலியின் அம்மா இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். அம்மாவின் இரண்டாவது கணவர் ஜுலியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி பணம் சம்பாதித்து வா என்கிறார். அதன் பின் பல போராட்டங்களுக்குப் பிறகு ஜுலி நடிகையாக மாறுவார். இதுதான் ‘ஜுலி 2’ படத்தின் கதை. ‘ஜுலி 2’ படம் நிச்சயம் ரசிகர்களைக் கவரும் ஒரு படமாக இருக்கும்,” என்றார்.

இந்தப் படம் தென்னிந்திய நடிகையாக முன்னணியில் இருந்த நக்மாவின் கதை என கடந்த சில தினங்களாக செய்தி பரவியிருந்தது. ஆனால், அதை நக்மா மறுத்துள்ளார். இருந்தாலும் படத்தைக் கண்டிப்பாகப் பார்ப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

நாளை ஜுலி 2 படம் வெளிவந்ததும் அது உண்மைக் கதையா கற்பனைக் கதையா என்பது தெரிந்துவிடும்.