screen4screen
12 12 1950 press meet

திட்டமிட்டு படம் எடுக்க வேண்டும் – கபாலி செல்வா வேண்டுகோள்

ஜியோஸ்டார் நிறுவனம் சார்பில் கோட்டீஸ்வர ராஜு தயாரிக்க கபாலி செல்வா எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் 12 12 1950.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தை பற்றிய சுவாரசிய தகவல்களை இயக்குனர், நாயகன் கபாலி செல்வா மற்றும் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.

பாடலாசிரியர் முத்தமிழ்

வா மச்சானே, டசக்கு டசக்கு போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை தொடர்ந்து இந்த 12 12 1950 படத்தில் 3 பாடல்களை எழுதியிருக்கிறேன். செல்வா சார் படம் இயக்குகிறார் என்று கேள்விப்பட்டவுடனே அந்த படத்தில் நான் பாடல் எழுதணும் என ஆசைப்பட்டேன். அவரை சந்தித்து வாய்ப்பை பெற்றேன். ரஜினி என்ட்ரி ஆகும் போது எப்படி கைதட்டி படத்தை ரசிப்பார்களோ, அந்த மாதிரி இந்த படத்தையும் ரசிகர்கள் ரசிப்பார்கள்.

ரமேஷ் திலக்

செல்வா சாருடன் ‘மோ’ என்ற படத்தில் எனக்கு நட்பு ஏற்பட்டது. அப்போது தான் இந்தப் படத்தின் கதையைச் சொல்லி நடிக்கச் சொன்னார். நான் வேலை பார்த்த படங்களிலேயே மிக வேகமாக படத்தை முடித்தவர் செல்வா சார் தான்.

அஜய் பிரசாத்

‘ராஜதந்திரம்’ படத்துக்குப் பிறகு நான் நடித்த இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகக் காத்திருந்தேன். அந்த நேரத்தில் தான் இந்தப் பட வாய்ப்பு எனக்கு அமைந்தது. சொன்ன மாதிரி குறிப்பிட்ட காலத்தில் படத்தை பக்காவாக எடுத்து முடித்திருக்கிறார் செல்வா. சீனியர் நடிகர்களோடு நடித்தது நல்ல அனுபவம்.

ஈ. ராம்தாஸ்

ஒவ்வொரு படத்துக்கும் ஏதாவது ஒரு விஷயம் ஒரு அடையாளமாக இருக்கும். இந்தப் படத்துக்கு தலைப்பே அடையாளம். திரையுலகை ஆளும் ரஜினி சாரின் பிறந்த தேதியை தலைப்பாக வைத்திருக்கிறார் செல்வா. தன் பெயரையே கபாலி செல்வா என மாற்றிக் கொள்ளும் அளவுக்கு தீவிர வெறியராக இருப்பார் என்று படப்பிடிப்பு நேரத்தில் தான் தெரிந்தது. பெரிய பணக்கார பாரம்பரியத்தில் இருந்து வந்தாலும் மிகவும் எளிமையான மனிதர். இன்றைய இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் அது.

ஜான் விஜய்

செல்வா பழகுவதற்கு மிகவும் இனிமையான மனிதர். ‘கபாலி’ படத்தில் நடித்த ஒரு நடிகனாகவே இதில் நான் நடித்திருக்கிறேன். கபாலி படத்தில் நடித்த பிறகு தமிழ்நாட்டில் எங்கு போனாலும் என்னை வரவேற்கிறார்கள். ரஜினி சாருக்கும், ரஞ்சித்துக்கும் நன்றி. ஒரு தீவிர ரஜினி ரசிகரின் படத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. ஒரு சிறந்த மனிதரை சந்தித்த அனுபவம் இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது.

தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜு

செல்வா சார் என்னிடம் ஒரு ஒன்லைன் கதையை சொன்னார். அவரைப் போலவே நாங்களும் ரஜினிகாந்தின் மிக தீவிரமான ரசிகர்கள். இந்த கதையை ஓகே செய்ய அதுவும் ஒரு முக்கிய காரணம். தெலுங்கு படங்கள் உட்பட பல நல்ல சினிமாக்களை தயாரித்து வருகிறோம். படத்தின் மொத்த பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு சிறப்பாக முடித்துக் கொடுத்தார் செல்வா.

எம்.எஸ்.பாஸ்கர்

ரஜினிகாந்த் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் மிகவும் பணிவாக இருக்கும் மனிதர். அவரைப் போலவே எல்லோரும் பணிவைக் கடைபிடிக்க வேண்டும். டப்பிங் கலைஞனாக இருந்த காலத்தில் இருந்தே நானும் செல்வாவும் நண்பர்கள். எனக்கு மிகப் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த பட்டாபி கதாபாத்திரத்தில் நான் நடிக்க முக்கிய காரணமே செல்வா தான்.

இயக்குனர், நாயகன் – செல்வா

என்னுடைய வாழ்வில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை தான் இந்தப் படம். 40 ஆண்டுகளாக நான் ரஜினி ரசிகனாக இருந்து வருகிறேன் என்பதை சொல்லிக் கொள்ள பெருமைப்படுகிறேன். என் அப்பாவிடம் கதையை சொன்னேன். அவர் நண்பர் கோட்டீஸ்வர ராஜு சாரிடம் அறிமுகப்படுத்தினார். அவரும் ரஜினி ரசிகர் என்பதால் கதையைக் கேட்டவுடன் ஓகே சொன்னார். முதன் முதலில் தம்பி ராமையாவிடம் கதையை சொன்னபோது அவர் கொடுத்த ஊக்கம், எனக்கு பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்தது.

சம்பளத்தைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் எனக்காக அனைவரும் நடித்துக் கொடுத்தனர். எம்எஸ் பாஸ்கர் அவர் வாங்கும் சம்பளத்தில் பாதி போதும் என சொல்லி எனக்காக நடித்துக் கொடுத்தார். அஸ்வினியிடம் அடுத்த படத்தில் உங்களுக்கு பெரிய ரோல் தரேன், என சொல்லி ஏமாற்றி தான் இந்தப் படத்தில் நடிக்க வைத்தேன். இந்தப் படத்தில் என் மகனும் ஒரு ரோலில் நடித்திருக்கிறான். நான் சொன்ன பட்ஜெட்டில் 20 சதவீதம் மிச்சப்படுத்தியது எனக்கு திருப்தியாக இருக்கிறது. இப்போது படமெடுக்கும் பலரும் தயாரிப்பாளரைப் போட்டு வதைக்கிறார்கள். திட்டமிட்டு படத்தை எடுத்தால் சினிமா துறை நன்றாக இருக்கும்.

தம்பி ராமையா 9 விதமான கெட்டப்பில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கமல் சாரை எந்த வகையிலும் அவமதிக்கவில்லை. பரோலில் வெளியே வந்து படம் பார்க்கும் ரசிகரைப் பற்றிய கதை தான் இந்தப் படம். ரஜினி சார் யாரையும் புண்படுத்த மாட்டார். நானும் அதை விரும்ப மாட்டேன். ரஜினி சார் பிஸியாக இருந்ததால் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. நேரம் கிடைத்தால் அவருக்கு படத்தைத் திரையிட்டு காட்ட விரும்புகிறேன். தொழில்நுட்ப கலைஞர்களின் குடும்பத்துக்கு திரையிடப்பட்ட சிறப்பு காட்சியில், பல பெண்கள் படத்தை விரும்பி பார்த்தார்கள்.

நான் கூட ரசிகர்களை சந்திக்க பல நேரங்களில் சலித்துக் கொள்வேன். ஆனால் ரஜினி சார் எல்லா ரசிகர்களையும் மதித்து, பழகக் கூடியவர். ரஜினி சாரை முதன் முதலாகப் பார்த்தபோது எனக்கு பேச்சே வரவில்லை. அவர் என்னை அழைத்து கட்டி பிடித்து வாழ்த்தினார். ‘பாட்ஷா’ படத்தில் தம்பி கதாபாத்திரத்துக்கு நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. பின் அது நடக்கவில்லை. அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். ரஜினி ரசிகர்களுக்காக மட்டும் இந்த படம் எடுக்கவில்லை. எல்லோரையும் கவரும் படமாக ‘12 12 1950’ படம் இருக்கும்.

டிசம்பர் 8 ஆம் தேதி 12 12 1950 வெளியாக உள்ளது.

SHARE: