screen4screen
kalavaadiya pozhuthugal review

களவாடிய பொழுதுகள் – விமர்சனம்

SHARE:

தமிழ் சினிமாவில் காதலும் காலத்திற்கேற்ப மாறிக் கொண்டுதான் இருக்கிறது. இன்றைய காதல் படங்களின் நிலைமையே வேறாக உள்ளது. சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு தயாரான ‘களவாடிய பொழுதுகள்’ படம் காலம் கடந்து வெளியானாலும் கண்ணியமான ஒரு படமாக அமைந்து ரசிக்க வைத்துள்ளது.

S4S Rating 2.75/5

களவாடிய பொழுதுகள் - காதலும், கல்யாணமும்...

எட்டு வருடங்களுக்கு முன்பு தயாரான ஒரு படம் என எந்தக் காட்சியிலும் சொல்ல முடியாத அளவிற்கு படம் அமைந்துள்ளது. இயக்குனர் தங்கர் பச்சான் மீண்டும் ஒரு ‘அழகி’யைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

கார் டிரைவராக இருக்கும் பிரபு தேவா, கர்நாடகா பயணம் சென்ற சமயத்தில் வழியில் விபத்தில் சிக்கிய பிரகாஷ்ராஜைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். அங்கு வரும் பிரகாஷ் ராஜின் மனைவியான பூமிகாவைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அதனால் சொல்லாமல், கொள்ளாமல் ஊருக்குத் திரும்பி விடுகிறார். தன்னைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தவரைத் தொடர்பு கொண்டு நன்றி சொல்ல நினைக்கிறார் பிரகாஷ்ராஜ். அப்போதுதான் தன் கணவரைக் காப்பாற்றியது தன் முன்னாள் காதலன் பிரபுதேவா என்பது பூமிகாவுக்குத் தெரிய வருகிறது. பல வருடங்கள் பிரிந்தவர்கள் மீண்டும் சந்திக்கும் சூழல் உருவாகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கண்ணியமான ஒரு காதலனா பொற்செழியன் என்ற கதாபாத்திரத்தில் அப்படியே வாழ்ந்திருக்கிறார் பிரபுதேவா. ஒரு பக்கம் மனைவி இன்பநிலாவின் நச்சரிப்பு, மற்றொரு பக்கம் முன்னாள் காதலியின் சந்திப்பு என தடுமாறுவதில் மிகையில்லாத ஒரு நடிப்பு. பூமிகா யார் என்பது தெரிந்த பின்பும் அவரை விட்டு ஒதுங்கியே இருக்க நினைக்கிறார். இப்படி ஒரு நேர்மையான காதலரை இந்தக் காலத்தில் சந்திக்க முடியுமா என்பது சந்தேகம்தான். பிரபுதேவா நடித்து வெளிவந்த படங்களில் இந்தப் படமும் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

தமிழ் சினிமா மறந்தே போன கதாநாயகி பூமிகா. பிரபுதேவாவுக்கு காதலனாக இருந்து, குடும்ப சூழ்நிலையால் பிரகாஷ் ராஜைத் திருமணம் செய்து கொள்ளும் ஜெயந்தி கதாபாத்திரத்தில் அவ்வளவு பொருத்தமாக நடித்திருக்கிறார். முன்னாள் காதலனுக்கும், அன்பான கணவருக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் நடிப்பு. கொஞ்சம் தடம் மாறியிருந்தாலும் தப்பாகப் போயிருக்கும். ஆனால், நடிப்பிலும், உடல் மொழியிலும் இரண்டடையும் அழகாகச் சமாளித்திருக்கிறார் பூமிகா.

மனைவியுடன் கூட அதிக நேரம் செலவிட முடியாமல் பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு பிஸினஸ்மேன். கிளைமாக்ஸ் காட்சி நடிப்பு ஒன்றே போதும் பிரகாஷ்ராஜின் நடிப்பிற்கு உதாணரம் சொல்வதற்கு. பிரபுதேவாவின் மனைவியாக இன்பநிலா. வருமானம் இல்லாத கணவனுடன் மல்லுக்கு நிற்கும் சராசரி குடும்பத் தலைவி.

பரத்வாஜ் இசையில் பாடல்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். இருந்தாலும், ‘தேடித் தேடிப் பார்க்கிறேன்…’ அர்த்தமுள்ள பாடலாக அமைந்து ரசிக்க வைக்கிறது.

SHARE: