kamalhaasan-political-entry

நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் தனிக் கட்சி அறிவிப்பு ?

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பார்த்து வந்தவர்களுக்கு கமல்ஹாசனின் அரசியல் ஆர்வம் பற்றி அதிகம் தெரிந்திருக்கும்.

நிகழ்ச்சியின் தொகுப்புரையிலும், போட்டியாளர்களுடன் உரையாடும் போதும் அரசியல் கலந்த கருத்துக்களை மறைமுகமாகவும், நேரடியாகவும் தெரிவித்திருப்பார்.

தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் அவரைக் கொண்டு போய்ச் சேர்க்கும் என்ற காரணத்தால்தான் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசன் சம்மதித்தார் என்றும் கூடச் சொல்லலாம்.

கமல்ஹாசன் போன்ற ஒரு நடிகர் டிவிக்கு வருவதென்றால் சும்மாவா…காரணங்கள் இல்லாமலா இருக்கும் என்று விமர்சித்தவர்களும் அதிகம்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் கடைசி நாளில் கூட அந்த நிகழ்ச்சியால் தனக்கு என்ன பயன், பலன் ஏற்பட்டது என்பதை கமல்ஹாசன் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

டிவிட்டரில் மட்டும் அரசியல் பதிவுகளைப் போட்டு வந்த கமல்ஹாசன், டிவி மூலம் மக்களிடம் நேரடியாக அவருடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

கமல்ஹாசன் எப்போது தனிக் கட்சி ஆரம்பித்து அரசியலில் இறங்கப் போகிறார் என்று அரசியல் கட்சிகளும், திரையுலகினரும், ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்று தன்னுடைய நற்பணி மன்ற நிர்வாகிகளை கமல்ஹாசன் சந்தித்துள்ளார். அதைத் தொடர்ந்து அவருடைய தனிக் கட்சி பற்றிய அறிவிப்பு நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாளில் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.