கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘கவண்’

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘கவண்’

SHARE
kavan audio release

‘தனி ஒருவன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட பதினெட்டாவது படமாகத் தயாரித்துக் கொண்டிருக்கும் படத்திற்கு ‘கவண்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.

கே.வி.. ஆனந்த் இயக்க ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க விஜய் சேதுபதி, டி. ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

‘கவண்’ என்பது தூய தமிழ்ச் சொல். மனிதன், ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டபோது, அவன் தயாரித்த முதல் விசைக்கருவி, ‘கவண்’ என்று கருதப்படுகிறது.

இலக்கைக் குறி பார்த்து, கல் எறியும் கருவியாகப் பயன்பட்ட ‘கவண்’ பற்றி தமிழ் இலக்கிய நூல்களிலும் குறிப்புகள் உள்ளன. விசை வில்பொறி (catapult), கல்லெறி கருவி (sling) என்று இலக்கியத்திலும், உண்டிக்கோல் என்று வழங்கு தமிழிலும் அழைக்கப்படுகிறது ‘கவண்’, என படத் தலைப்பிற்கு ஒரு விளக்கத்தையே கொடுத்திருக்கிறார்கள்.

மாற்றான், அநேகன் படங்களை அடுத்து, கே.வி. ஆனந்த், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் தொடர்ந்து இயக்கும் மூன்றாவது திரைப்படம் இது. பெரும் பொருட்செலவில் மிகப் பிரமாண்டமான செட்கள் அமைத்து, திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதி, நாயகனாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, டி. ராஜேந்தர் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். மடோனா செபாஸ்டின், விக்ராந்த், பாண்டியராஜன், நாசர், போஸ் வெங்கட், ஆகாஷ்தீப், ஜெகன் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பது, இதுவே முதன்முறை. இளமை ததும்பும் ஐந்து பாடல்களை வழங்குகிறார் ஹிப் ஹாப் தமிழா. அதிலும் குறிப்பாக டி.ராஜேந்தரும், ஹிப் ஹாப் தமிழாவும், கதாநாயகி மடோனாவும் இணைந்து பாடியிருக்கும் புது வருடப்பாடல் இனி ஒவ்வொரு புது வருடத்திற்கும் தவறாமல் ஒலி,ஒளிக்குமாம்.

கே.வி. ஆனந்துடன் இணைந்து படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை இரட்டை எழுத்தாளர்கள் சுபா, மற்றும் கபிலன் வைரமுத்து அமைத்திருக்கிறார்கள்.

தொடங்கிய நாளிலிருந்து படப்பிடிப்பு, விறுவிறுவென நடந்து, நிறைவடையும் கட்டத்துக்கு வந்திருக்கிறது. நவம்பரில் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.