கோடிகளைக் குவிக்க வரும் ‘கோப்பெருந்தேவி’…

‘கோப்பெருந்தேவி’, படத்தின் தலைப்பிலேயே ஒரு கம்பீரமும், பிரம்மாண்டமும் தெரிகிறது. தலைப்புக்கேற்றபடியே படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சங்கர் பழனிச்சாமி.

சமீபத்திய பேய்ப் படங்களின் வரிசையில் அதிகமாக வசூலை அள்ளிய படங்களான ‘அரண்மனை, காஞ்சனா 2’ ஆகிய படங்களில் நடித்துள்ள சில முக்கிய நட்சத்திரங்கள் இந்த ‘கோப்பெருந்தேவி’யில் நடித்திருப்பது படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.

கோவை சரளா, ஊர்வசி, மனோபாலா, வி.டிவி.கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இளவரசு, லொள்ளு சபா சாமிநாதன், மனோகர், பாண்டு, வெண்ணிறாடை மூர்த்தி, வடிவுக்கரசி என்று இந்தப் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

சரி, படத்தில் யார் ‘கோப்பெருந்தேவி’ என்றுதானே கேட்கிறீர்கள். ஆராத்யா என்ற அட்டகாசமான ஒரு அழகியை இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார்கள். கேரள நடிகைகளுக்கு தமிழ்த் திரயுலகம் ஆரத்தி எடுத்து வரவேற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வெற்றிகரமான நாயகிகளின் வரிசையில் ஆராத்யாவும் கண்டிப்பாக இடம் பிடிப்பார்.

“காமெடி, த்ரில்லிங், வரலாறு இப்படி பல விஷயங்களை அடக்கியுள்ள படமாக இந்தப் படம் தயாராகியுள்ளது. லடாக், பொள்ளாச்சி என இயற்கை எழில் கொஞ்சும் இடங்களிலும், சில திகிலான மலைப் பிரதேசங்களிலும் படத்தைப் படமாக்கியிருக்கிறோம். இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காகவே கொஞ்சம் பொறுமையாக படத்தை உருவாக்கினோம். மே மாதக் கடைசியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். தமிழில் மட்டுமல்லாமல் இந்தப் படத்தைத் தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டுள்ளோம். அடுத்து இரண்டாவது பாகத்தையும் விரைவிலேயே முடிக்க உள்ளோம்,” எனச் சொல்கிறார் படத்தின் இயக்குனர் சங்கர் பழனிச்சாமி.