SHARE
lens tamil movie

இன்றைய இளம் தலைமுறை பொழுதைப் போக்க பல விஷயங்கள் இருக்கின்றன. இருந்தாலும் சமூக வலைத்தளமே கதி என ஒரு கூட்டம், அவர்களின் உன்னதமான நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது.

இளைஞர்கள் அதிக நேரத்தை சமூக வலைத்தளங்களில் செலவிடுகிறார்கள் என்றால் அவர்களுக்கும் சளைக்காமல் நடுத்தர வயதினரும், வயதானவர்களும் கூட அதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.

ஒரே ஒரு இணைய தொடர்பு இருந்தால் எதை வேண்டுமானாலும் இணைத்து விடலாம் என்ற பேராபத்து நம் அனைவரின் தலை மீதும் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பேராபத்தைப் பற்றித்தான் இந்த ‘லென்ஸ்’ படத்தில் சொல்லியிருக்கிறார் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

மனைவி, மகள் என நடுத்தர வயதுடைய ஜெயப்பிரகாஷ், சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களுடன் ‘சாட்’ செய்வதை பெரிய பொழுதுபோக்காகக் கொண்டவர். சில சமயங்களில் அந்த சாட்டி ஆபாச வீடியோ வரை எல்லை மீறும். அப்படி ஒரு பெண்ணுடன் ‘சாட்’ செய்த சமயத்தில், அந்தப் பெண்ணின் ‘அக்கவுன்ட்’ மூலமாக ஆனந்த் சாமி வீடியோ சாட்டில் வந்து தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், அதை ஜெயப்பிரகாஷ் பார்க்க வேண்டும் என்றும் மிரட்டுகிறார். அடுத்து  அவருடன் இருக்கும் ஒரு பெண்ணின் அந்தரங்க காட்சியைக் காட்டுகிறார். அந்தப் பெண் வேறு யாருமல்ல, ஜெயப்பிரகாஷின் மனைவி. தன் மனைவி, ஆனந்த் சாமியிடம் எப்படி மாட்டிக் கொண்டார் என திகைத்துப் போகிறார் ஜெயப்பிரகாஷ். அதன் பின் படத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் மிகவும் பரபரப்பானவை, எதிர்பாராதவை.

இப்படி ஒரு கதையை யோசித்து படமாக்கியதற்காகவே இயக்குனர் ஜெயப்பிரகாஷைப் பாராட்டலாம். இந்தப் பக்கம் ஜெயப்பிரகாஷ் அறை, அந்தப் பக்கம் ஆனந்த் சாமியின் அறை என இடைவேளை வரை சென்றாலும் பரபரப்புக்குத் துளியும் பஞ்சமில்லை.

அந்த மாதிரி வீடியோக்களைப் பார்ப்பதில் அலாதி ஆர்வம் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ் அவ்வளவு பொருத்தமாய் நடித்திருக்கிறார். ஆர்வம், அதிர்ச்சி, திகைப்பு, பயம் என நொடிக்கு நொடி தன்னுடைய நடிப்பை யதார்த்தமாய் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆனந்த் சாமியை படத்தின் வில்லன் என்று சொல்ல முடியாது. அப்படி ஒரு நிலைமை ஒருவனுக்கு வரவே கூடாது என்றுதான் நாம் நினைப்போம். திருமண வாழ்க்கைக்குள் பல கனவுகளுடன் நுழையும் ஒருவனுக்கு இப்படிப்பட்ட நிலைமை வந்தால் என்ன ஆகும். அந்த பெரும் கோபத்தை அற்புதமாய் காட்டி அசத்தியிருக்கிறார் ஆனந்த்சாமி.

ஆனந்த்சாமியின் மனைவியாக அஸ்வதி லால் கொஞ்சமே வந்தாலும், அச்சச்சோ என பரிதாப்பட வைக்கிறார்.

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு இரண்டு அறைகளிலும் படத்தின் அதிக நேரத்தைப் பார்க்கிறோம் என்பது தெரியாமல் பயணித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது.

இனி, வீட்டுக்குள் உடை மாற்றும் போது கூட காமிரா கண்கள் எங்காவது இருக்கிறதா என பார்க்கத் தூண்டும்.