screen4screen
madura veeran review

மதுர வீரன் விமர்சனம்

தமிழ் சினிமாவில் தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம், விளையாட்டு, மற்ற பழக்க வழக்கங்கள் என தமிழர்களின் பெருமையைச் சொல்லும் படங்கள் அடிக்கடி வருவதில்லை என்ற குறையை இந்தப் படம் தீர்த்து வைத்துள்ளது.

S4S Rating - 2.5/5

2017ம் ஆண்டு அகில உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்களின் வீரத்தைப் போற்றும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை மையப்படுத்தி, இந்தப் படத்தில் கதையை உருவாக்கி படமாக எடுத்ததற்குப் பாராட்டுகள்.

அதே சமயம், அதை இன்னும் அழுத்தமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருந்தால் இந்த ‘மதுர வீரன்’ தமிழ் சினிமாவில் தனி தடத்தைப் பதித்திருக்கும். அந்த விஷயத்தில் இயக்குனர் பி.ஜி. முத்தையா இன்னும் அதிகமாக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

அப்பா சமுத்திரக்கனி கொலை செய்யப்பட்டதால், ஊரை விட்டே போய் மலேசியாவில் வளர்ந்த சண்முகப்பாண்டியன் மீண்டும் மதுரைக்கு அருகில் உள்ள அவரது கிராமத்திற்கு வருகிறார். அப்பாவைக் கொலை செய்தது யார் எனக் கண்டுபிடிக்க வேண்டும், அப்பாவால் பிரமாதமாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டை மீண்டும் நடத்த வேண்டும் என்ற முயற்சியில் இறங்குகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கிராமத்து முரட்டுத்தனமான கம்பீரமான இளைஞன் கதாபாத்திரத்திற்கு தோற்றத்தில் மிகப் பொருத்தமாக இருக்கிறார் சண்முகப்பாண்டியன். ஆனாலும், நடிப்பில் இன்னும் பயிற்சி வேண்டும், நடனத்தில் அதிகப் பயிற்சி வேண்டும். சண்டைக் காட்சிகளில் மட்டும் அப்பாவையும் மிஞ்சும் அளவிற்கு அதிரடி காட்டுகிறார்.

நாயகி மீனாட்சிக்கு அதிக வேலையில்லை, வரும் சில காட்சிகளிலும் அவருடைய இருப்பைப் பதிவு செய்கிறார். இவருக்கும் சண்முகப்பாண்டியனுக்கும் இன்னும் கொஞ்சம் காதல் காட்சிகளை வைத்திருந்திருக்கலாம்.

ஊரே மெச்சும் பெரிய மனிதராக சமுத்திரக்கனி. சாதி வித்தியாசம் பார்க்காமல் மனுஷனை மனுஷனாகப் பார்க்கிறார். அதுவே, அவரைக் கொலை செய்யவும் வைத்துவிடுகிறது. சாதி வெறியில் திளைத்தவர்களாக வேல ராமமூர்த்தி, மைம் கோபி முறுக்கிக் கொண்டு திரிகிறார்கள். பி.எல். தேனப்பன் கதாபாத்திரத்தின் திருப்புமுனை எதிர்பாராத ஒன்று. பால சரவணன் நாயகன் கூடவே இருக்கிறார். இன்னும் கூடுதலாக சிரிக்க வைத்திருக்கலாம்.

சந்தோஷ் தயாநிதி இசையில் கிராமிய மணம் வீசும் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. ‘காட்டோரி நெருங்காம…’ பாடல் மற்ற பாடல்களை விட சுண்டி இழுக்கிறது.

திரைக்கதையில் மட்டும் இன்னும் கொஞ்சம் அதிக விறுவிறுப்பைச் சேர்த்திருந்தால் ‘மதுர வீரன்’, மண்ணுக்கே வீரன் ஆக பாராட்டப்பட்டிருப்பார்.

 

SHARE: