mahesh-babu-tamil-movies

மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிப்பாரா மகேஷ் பாபு ?

தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள அழகான கதாநாயகர்களில் மகேஷ் பாபு முக்கியமானவர். அவர் நடித்து வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகி வசூலை அள்ளிக் குவித்துள்ளன, சில படங்கள் தோல்வியடைந்துள்ளன.

தெலுங்கில் தனிப் பெரும் ஸ்டார் ஆக இருக்கும் மகேஷ் பாபு தமிழிலும் அறிமுகமாக ஆசைப்பட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கில் கடந்த வாரம் வெளியான இந்தப் படம் தெலுங்கில் பெற்ற வரவேற்பை விட தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மகேஷ் பாபு, தமிழ் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்ததாலும், தமிழில் அறிமுகமாக ஆசைப்பட்டதாலும் சில தெலுங்கு ஊடகங்களும், மற்ற தெலுங்கு ஹீரோக்களின் ரசிகர்களும் படத்தைப் பற்றி தவறான தகவல்களை பரப்ப ஆரம்பித்தனர்.

வழக்கமான அடிதடி மசாலாப் படமாக இல்லாத ‘ஸ்பைடர்’ படம் தெலுங்கு ரசிகர்களைத் திருப்திப்படுத்தவில்லை, படம் தோல்வி, வசூலைக் குவிக்கவில்லை என்றெல்லாம்தான் அதிகமான செய்திகள் வெளிவந்தன.

இதற்கு முன் மகேஷ் பாபு நடித்த படங்களிலிருந்து ‘ஸ்பைடர்’ மாறுபட்டு இருந்ததை தெலுங்கு ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதை ஒரு தமிழ் இயக்குனர் செய்ததை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதையே ஒரு தெலுங்கு இயக்குனர் இயக்கியிருந்தால் படம் சூப்பர் என்றும் சொல்லியிருப்பார்கள்.

அவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி ‘ஸ்பைடர்’ படம் உலக அளவில் 6 நாட்களில் 102.6 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதில் பங்குத் தொகையாக மட்டும் 61.8 கோடி கிடைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

தெலுங்கில் இப்படி தன்னைப் பற்றித் தவறான தகவல்களை சிலர் வேண்டுமென்றே பரப்புவதால், தெலுங்கு மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்ள மகேஷ் பாபு இனி, தமிழ்ப் படங்களில் நடிப்பார் என்பது சந்தேகம்தான்.