SHARE
nibunan movie review

ஒரு படத்தின் வெற்றிக்கு கதை, திரைக்கதை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியம் அந்தப் படத்தின் உருவாக்கம்.

இந்தக் காலத்து ரசிகர்கள் படங்களின் உருவாக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்களைக் கவரும் விதத்தில் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் படம் இருந்தால் அவற்றைத் தவறாமல் ரசிக்கிறார்கள்.

அப்படி இந்தக் கால ரசிகர்களை மனதில் கொண்டு, அற்புதமான உருவாக்கத்துடன் வந்துள்ள விறுவிறுப்பான, பரபரப்பான படம்தான் ‘நிபுணன்’.

ஒரு மாறுபட்ட த்ரில்லர் படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் அருண் வைத்யநாதன்.

போலீஸ் கதை என்றாலே அதற்குப் பொருத்தமான நட்சத்திரங்கள் அமைய வேண்டும். அவர்களைப் பார்த்தால் கம்பீரமான போலீஸ் என ரசிகர்கள் நம்ப வேண்டும். அதற்கேற்றபடியான சரியான நட்சத்திரத் தேர்வும் படத்தை இன்னும் மேலே எடுத்துச் செல்கிறது.

அர்ஜுன் தலைமையிலான சிஐடி போலீஸ் குழுவில் பிரசன்னா, வரலட்சுமி ஆகியோர் உள்ளார்கள். இந்தக் குழுவிற்கு சவால் விடும் வகையில் அடுத்தடுத்து சில கொலைகள் நடக்கின்றன. முதலில் ஒரு அரசியல்வாதி, அடுத்து ஒரு டாக்டர், அதற்கடுத்து ஒரு வக்கீல் என கொலை செய்யப்படுகிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் அந்தக் கொலைகாரனின் அடுத்த டார்கெட் தான்தான் என்பதை அர்ஜுன் கண்டுபிடிக்கிறார். அதிலிருந்து அவர் தப்பித்தாரா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அர்ஜுன் நடித்து வெளிவரும் 150வது படம். போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் என்றாலே அது அர்ஜுனுக்கு ‘டெய்லர் மேட்’ கதாபாத்திரம். சிஐடி அதிகாரி ரஞ்சித் கதாபாத்திரத்தில் அர்ஜுனின் நடிப்பு வழக்கம் போல அசத்தல். இந்த வயதிலும் அவருடைய ஆக்ஷன் நடிப்பு கொஞ்சம் கூட சுறுசுறுப்பு குறையாமல் இருப்பதை இந்தக் கால நடிகர்கள் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். ஆக்ஷன் கிங் என்றுமே ஆக்ஷன் கிங்தான்.

அர்ஜுனின் குழுவில் முதன்மை உதவி அதிகாரி ஜோசப் ஆக பிரசன்னா. எந்தக் கதாபாத்திரத்திலும் தன்னைப் பொருத்திக் கொள்ளும் பிரசன்னாவின் நடிப்பு நாளுக்கு நாள் ஆச்சரியப்படுத்திக் கொண்டே போகிறது. இதற்கு முன் ‘ப. பாண்டி’ படத்தில் பார்த்ததற்கும் இந்தப் படத்திற்கும் நிறையவே மாற்றம். தமிழ் சினிமா இவரை இன்னும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

பெண் போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி. அவரா இது என ஆச்சரியப்பட வைக்கிறார். இவருக்கும் இரண்டு சண்டைக் காட்சிகளைக் கொடுத்திருந்தால் அடுத்த விஜயசாந்தி இவர்தான்.

அர்ஜுனின் மனைவியாக ஸ்ருதி ஹரிஹரன், காவல் துறை அதிகாரிகளின் மனைவிகள் எந்த ஒரு மனநிலையில் இருப்பார்கள் என்பதைக் கண்முன் நிறுத்துகிறார்.

படத்தில் யார் அந்த சீரியல் கில்லர் என்பதுதான் படத்தின் மிகப் பெரும் சஸ்பென்ஸ். அதை படத்தில் பார்த்துதான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த மாதிரியான த்ரில்லர் படங்களுக்கு பின்னணி இசையும், ஒளிப்பதிவும் மிகவும் முக்கியம். நவீனின் பின்னணி இசையும், அரவிந்த்கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் படத்தை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.

சாதாரணமான த்ரில்லர் படங்களைப் பார்த்து போராடித்துப் போயிருக்கும் ரசிகர்களுக்கு இந்த ‘நிபுணன்’ புத்துணர்வைக் கொடுப்பார்.