உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் ‘ஒரு குப்பைக் கதை’

உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் ‘ஒரு குப்பைக் கதை’

SHARE
Oru Kuppaik kadhai

ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் பாகன் பட இயக்குநர் அஸ்லம், என். அரவிந்தன், ராமதாஸ் ஆகியோர் தயாரிக்க, காளி ரங்கசாமி இயக்கத்தில் நடன இயக்குநர் தினேஷ் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பைக் கதை’.

தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் தினேஷ். எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும் மிகப் பிடித்தமான நடன இயக்குநர். தேசிய விருது உட்பட பல விருதுகளைக் குவித்தவர்.

தன் உதவி இயக்குநர் காளி ரங்கசாமியை இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாக்கியுள்ள அஸ்லம், அவருக்காக தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.

இந்த படத்தைப் பார்த்ததும் தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவருடைய ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் படத்தை வெளியிட உள்ளார்.

இது பற்றி தயாரிப்பாளர் அஸ்லம் கூறியதாவது,

“சார், படம் தயாராக உள்ளது, தாங்கள் பார்க்க முடியுமா ? ‘ என்று ‘மைனா’வை உலகம் முழுக்க பார்க்க வைத்த உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டேன். நல்ல படங்களின் மேல் அக்கறையுள்ள அவர், சமீபமாக தனது படம் தவிர வேறெந்த படத்திலும் கவனம் செலுத்தாமல் இருந்தார். எங்கே நம்ம படத்தை பார்க்கப் போகிறார் ? என நினைத்தேன். ஆனால், உடனடியாக நேரம் ஒதுக்கி படம் பார்த்தவர், பெரிதும் பாராட்டினார்.

“படம் அடித்தட்டு மக்களின் பிரச்சனையைப் பேசுகிறது. இக்காலகட்டத்தில் இது போன்ற படம் அவசியம் எனக் குறிப்பிட்டவர், டான்ஸ் மாஸ்டர் தினேஷுக்குள் ஒரு மிகச் சிறந்த நடிகன் ஒளிந்திருப்பதை, படம் பார்த்தபோது உணர்ந்ததாக மனம் திறந்து பாராட்டினார். அவரே தன்னுடைய நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் டத்தை வெளியிட சம்மதமும் தெரிவித்துள்ளார். ஒரு தரமான படத்தைத் தயாரித்ததற்காக என்னையும், இயக்குநரையும் வெகுவாகப் பாராட்டினார் உதயநிதி ஸ்டாலின்,” என்றார் தயாரிப்பாளர் அஸ்லம்.

தினேஷ் ஜோடியாக மனீஷா யாதவ் நடித்துள்ளார். இவர் ‘வழக்கு எண்18/9, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், திரிஷா இல்லன்னா நயன்தாரா’ ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர். சுஜோ மேத்யூ, கிரண் ஆர்யன் என்ற இரு புதுமுகங்களும் இப்படத்தில் அறிமுகமாகிறார்கள்.

யோகி பாபு, ஜார்ஜ் படத்தின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஆதிரா அம்மாவாக நடித்துள்ளார்.

மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவிலும், நா.முத்துக்குமார் பாடல் வரிகளிலும், ஜோஸ்வா ஸ்ரீதர் இசையிலும், கோபிகிருஷ்ணா எடிட்டிங்கிலும் உருவான ‘ஒரு குப்பை கதை’ விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.