actress oviya

ஓவியா நிலைமை, மறைக்கும் பிக் பாஸ்

விஜய் டிவியில் கடந்த 40 நாட்களாக ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை அனைவரையும் பார்க்க வைத்த பெருமை ஓவியாவை மட்டுமே சாரும்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனை விடவும், ஓவியாவைப் பற்றி சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பகிர்வதும், அவரைப் பற்றி புகழ்ந்து பேசும் மீம்ஸ்களைப் போடுவதுமாக ஓவியாவிற்காக உருவான திடீர் ரசிகர்கள் தொடர்ந்து செய்து வந்தனர்.

ஓவியாவின் ஒவ்வொரு செய்கைகளும் நிகழ்ச்சியைப் பார்க்கும் பலரையும் கவர்ந்தது. மற்றவர்களைப் புறம் பேசாதது, அவர் அவராகவே இருந்தது போன்ற அவரின் குணங்கள் ஆச்சரியப்பட வைத்து அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களை அதிகரிக்கச் செய்தது.

ஆனால், இந்த வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஓவியாவின் நடவடிக்கைகள் அனைத்தும் முந்தைய வாரங்களுக்கு நேர்மாறாக இருந்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் எந்த வேலையும் செய்யாதது, டாஸ்க்குகள் எதிலும் கலந்து கொள்ளாது, இரவு முழுவதும் தூங்காமல் சுற்றிக் கொண்டிருந்தது என அவரது நடவடிக்கைகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின.

ஓவியாவின் காதலை மற்றொரு போட்டியாளரான ஆரவ் ஏற்க மறுத்ததும், ஆரவ் தொடர்ந்து ஓவியாவை விட்டு விலகியிருந்ததும், ஓவியாவிற்கு மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியதாகவே புரிந்து கொள்ள முடிந்தது.

நிகழ்ச்சியின் படத் தொகுப்பிலும் குழப்பம்தான் அதிகம் இருந்தது. நேற்று மாலை திடீரென ஓவியா தற்கொலை முயற்சி என வதந்தி பரவியது. போலீஸ் விசாரணையும் நடைபெற்றது என்றார்கள்.

இரவு நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு ஓவியாவின் தற்கொலை முயற்சி வதந்தி அல்ல உண்மைதான் என்று புரிந்தது. ஆனால், 50 கேமராக்கள் இருக்கும் அந்த வீட்டில் ஓவியா நீச்சல் குளத்தில் எப்படி விழுந்தார் என்பதைக் காண்பிக்கவில்லை. வீட்டிற்குள் இருந்து மற்றவர்கள் பதைபதைப்புடன் ஓடியதை மட்டுமே காண்பித்தார்கள்.

அதன் பின் ஓவியா வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், அவரை வீட்டை விட்டு வெளியே போக பிக் பாஸ் சம்மதித்துள்ளதாகவும், அவருடையே மேனேஜருக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும், காயத்ரி மூலமாக ஓவியாவிடம் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து ஓவியா சினேகன், காயத்ரி, வையாவுரி, ஆரவ் உள்ளிட்டோரிடம் வழக்கம் போல பேசிக் கொண்டிருந்ததுடன் நேற்யை பரபரப்பான நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.

ஆனால், தினமும் நிகழ்ச்சியின் முடிவில் நாளை என்ன இடம் பெற உள்ளது என்ற டீசரைக் காண்பிப்பது வழக்கம். அதை நேற்றைய நிகழ்ச்சியில் காட்டவில்லை.

அதனால், தொடர்ந்து ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கிறாரா இல்லையா என்பது மர்மமாகவே உள்ளது. ஓவியா பற்றிய நிலைமையை இந்த வாரம் முழுவதும் குழப்பிய பிக் பாஸ் இன்னமும் குழப்பியே வருகிறார்.

ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் என்று நேற்று இரவு முதலே சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

டிவிட்டரிலும், ஓவியாவின் ரசிகர்கள், “#bbhouse, #darlingll, #bye #nomorebiggboss #nooviyanobb #ripbiggboss,” போன்ற ஹேஷ்டேக்குகளை டிரென்டிங்கில் கொண்டு வந்தனர்.

ஓவியா உண்மையிலேயே வீட்டை விட்டு வெளியேறிவிட்டாரா என்பது இன்று தெரிந்துவிடும். அப்படி அவர் வெளியேறி இருந்தால் கடந்த 40 நாட்களாக வெற்றிகரமாக போய்க் கொண்டிருந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஓவியா இல்லாமல் ரசிகர்களால் பார்க்கப்படுமா என்பதும் கேள்விக் குறிதான்.