SHARE
pandigai review

உண்மையிலேயே ஆக்ஷன் படம் என்றால் இந்த ‘பண்டிகை’ படத்தைத்தான் சொல்ல வேண்டும்.

மற்ற படங்களில் எப்போதாவதுதான் சண்டை வரும். ஆனால், இந்தப் படத்தில் சண்டையை சுற்றித்தான் படமே.

அறிமுக இயக்குனர் பெரோஸ், முதல் படத்திலேயே ஒரு பரபரப்பான ஆக்ஷன் படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

ஹோட்டரில் சர்வர் வேலைக்கான பயிற்சியில் இருக்கிறார் கிருஷ்ணா. ஆனந்தியைப் பார்த்ததும் காதல் கொள்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் கிருஷ்ணாவின் போன் உடைந்துவிட, போன் வாங்குவதற்காக சரவணன் ஏற்பாட்டின்படி ஒரு சண்டைப் போட்டியில் கலந்து கொள்கிறார். அதன் பின் அதுவே அவருக்கு வழக்கமாகிவிடுகிறது.

ஒரு முறை சண்டைப் போட்டியை நடத்தும் மசூதனராவிடமிருந்து சில பல கோடிகளை கொள்ளையடிக்கலாம் என சரவணன் ஐடியா தருகிறார். அதற்கு கிருஷ்ணாவும் சம்மதித்து பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். பணத்தை இழந்த மதுசூதனராவ், பணத்தைக் கொள்ளையடித்தவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க ஆட்களை இறக்குகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கோபக்கார இளைஞனனாக அடிதடி, சண்டையில் அசத்தும் நாயகனாக கிருஷ்ணா. இதுவரை அவர் நடித்து வெளிவந்த படங்களில் இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கேற்ற பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும், அந்த பழைய தியேட்டருக்குள் நடக்கும் சண்டைப் போட்டியில் அவரது ஆவேசமும், ஆக்ரோஷமும் நிஜமென்று நம்பும்படி அமைந்துள்ளது.

படத்தின் நாயகியாக ஆனந்தி. படத்தில் காதலும் வேண்டும் என்பதற்காக ஒரு நாயகி. மற்றபடி இவருக்கு அதிக வேலையில்லை.

சூதாடியே பணத்தைத் தொலைக்கும் சரவணன். கிருஷ்ணாவை பணத்தாசை காட்டி சண்டை போட இழுக்கிறார். அதன் பின் கொள்ளையடிக்கவும் வைக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரம்.

தாதாவாக மதுசூதன ராவ், அவரது தோற்றமும் நடிப்பும் அப்படி ஒரு மிரட்டல். சூதாட்டத்தை நடத்தும் புக்கியாக வித்தியாசமான தோற்றத்தில் நிதின் சத்யா, ரசிக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவு, படத் தொகுப்பு, பின்னணி இசை அனைத்துமே படத்திற்கு கூடுதல் பலம்.