screen4screen
rajinikanth fans meet day 5

மக்களை மாற்றணும், மாற்றத்தை உண்டாக்கணும் – ரஜினிகாந்த் பேச்சு

இந்தியத் திரையுலகின் முக்கிய நட்சத்திரமான ரஜினிகாந்த் கடந்த 5 நாட்களாக அவருடைய ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார்.

முதல் நாளில் அவர் பேசிய போது, தன்னுடைய 21 வருட கால அரசியல் தொடர்புகளைப் பற்றிப் பேசினார். அது கடந்த ஐந்து நாட்களாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் விவாதமாகி, பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

புகைப்படம் எடுக்கும் நிகழ்வின் கடைசி நாளாளான இன்று ரசிகர்களின் முன்னிலையில் பேசினார்.

அவருடைய பேச்சுக்கள் அவர் அரசியலில் இறங்குவார் என்பதை உணர்த்துவதாகவே உள்ளது.

ரஜினிகாந்த் பேசிய பேச்சின் முழு விவரம்…

“மீடியா சகோதரர்கள் என்னை விரட்டு விரட்டுன்னு விரட்டி, ஏன்னா..அவங்க பாஸுங்க அவங்கள விரட்டுறாங்க, அவங்க என்னை விரட்டுறாங்க. நான் சென்னையெல்லாம் சுத்தி வந்துட்டேன், அதுக்காக…

நாலஞ்சி வார்த்தைப் பேசினாலே சர்ச்சையாகுது, வாதம், விவாதம் ஆகுது. இன்னும் பேசிட்டிருந்தால், மறுபடியும் சர்ச்சை ஆகிட்டே இருக்கும். நான் அவாய்ட் பண்ணன்னு மீடியா நண்பர்கள் தப்பா நினைக்க வேண்டாம்.

முதல் நாள் நான் பேசும் போது, அரசியலுக்கு நான் வந்தால் நீங்க எப்படியிருக்கணும்னு நான் சொன்னது வந்து, இவ்வளவு பெரிய ஒரு சர்ச்சையா, வாதம் விவாதமா, ஒரு ரூபத்தை எடுக்கும்னு நான் எதிர்பார்க்கலை.

வாதம், விவாதம் இருக்கலாம், ஆதரவு, எதிர்ப்பு இருக்கலாம். எதிர்ப்பு இல்லாம வளரவே முடியாது. அதுவும் அரசியல்ல வந்து எதிர்ப்புதான் மூலதனம்.

ஆனால், சில சோஷியல் மீடியால, டிவிட்டர்ல, பேஸ்புக்ல சில பேர் வந்து திட்டி எழுதும் போது எனக்கு கஷ்டமா இல்ல. ஏன், தமிழ் மக்கள் இவ்வளவு கீழ்த்தரமா போயிட்டாங்க, வார்த்தைல யூஸ் பண்றதுன்னு ஒரு வருத்தம்.

ஒண்ணே, ஒண்ணு கிளியர் பண்ணணும். ரஜினிகாந்த் தமிழனானன்னு ஒரு கேள்வி வருது. எனக்கு இப்போ 67 வயசு ஆகுது. 23 ஆண்டுதான் நான் கர்நாடகத்துல இருந்தேன். மிச்ச 44 ஆண்டுகள், இங்கதான், உங்க கூடவே வளர்ந்தேன். கர்நாடகத்துல இருந்து ஒரு மாராட்டியனாவோ, கன்னடக்காரனாவோ நான் இங்க வந்திருந்தால் கூட நீங்க என்னை ஆதரிச்சி, அன்பு கொடுத்து, பேரும் புகழும் அள்ளிக் கொடுத்து, நீங்கதான் தமிழனா ஆக்கிட்டீங்க. ஆகவே, நான் பச்சைத் தமிழன்.

எங்க மூதாதையர்கள், அப்பாலாம் கிருஷ்ணகிரில பிறந்தவங்கன்னு நான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.

என்னை வந்து இங்கிருந்து வெளிய போ, அப்படின்னு சொன்னால், தூக்கிப் போட்டால், நான் இமயலைக்குதான் போய்தான் விழுவேனே தவிர வேற எந்த மாநிலத்துலயும் போய் விழ மாட்டேன்.

ஏன்னா, தமிழ் மக்கள், நல்ல மக்கள், நல்ல உள்ளங்கள் இருக்கிற பூமியில இருந்தால் இங்க இருக்கணும். இல்லை சித்தர்கள் இருக்கிற இமயமலைல இருக்கணும்.

என்னை, வாழ வைக்கும் தெய்வங்கள் நீங்க, என்னை வாழ வச்சீங்க. என்னை வாழ வச்ச தெய்வங்கள் நல்லா இருக்கக் கூடாதா ?. என்னை மாதிரி அவங்களும் நல்லா இருக்கக் கூடாதா ?, அப்படின்னு நினைக்கிறதுல என்ன தப்பு இருக்குன்னு சொல்லி எனக்கு தெரியலை.

சரி, அதுக்கு வந்து நீ என்ன, மத்தவங்க இருக்காங்க, நீ என்னை கரெக்ட் பண்றதுன்னு சொன்னா….இருக்காங்க…

அருமை தளபதி மு.க.ஸ்டாலின் எனது நெருங்கிய நண்பர், திறமையான நிர்வாகி. சோ சார் அடிக்கடி சொல்வார். அவருக்கு மட்டும் ப்ரீ-ஹேன்ட் கொடுத்தால், ரொம்ப நல்லா செயல்படுவாரு, ப்ரீ-ஹேன்ட் கொடுக்க மாட்றாருன்னு.

அன்புமணி ராமதாஸ் நல்லா படிச்சவர். நல்ல விஷயம் தெரிஞ்சவர், மாடர்னா தின்க் பண்றவர். உலகமெல்லாம் சுற்றியிருக்கவர், நல்ல கருத்துக்கள், நல்ல பிளான்லாம் வச்சிருக்காரு.

திருமாவளவன், தலித்துக்கு ஆதரவா நல்லா குரல் கொடுத்து உழைச்சிட்டிருக்காரு.

சீமான், போராளி, அவருடைய சில கருத்துக்களைக் கேட்டு பிரமிச்சுப் போயிருக்கேன்.

இன்னும் தேசியக் கட்சிகள் எல்லாம் இருக்காங்க, ஆனால், சிஸ்டம் கெட்டுப் போயிருக்கே. ஜனநாயகமே கெட்டுப் போயிருக்கே.

அரசியல் பத்தி, ஜனநாயகம் பத்தி, மக்களோட மன ஓட்டமே மாறிப் போயிருக்கே. ஆக, சிஸ்டத்தையே மாத்தணும். மனரீதியா ஜனங்களை மாத்தணும், மாற்றத்தை உண்டாக்கணும், அப்பதான் நாடு உருப்படும். அது எல்லாரும் சேர்ந்து பண்ண வேண்டியது.

இந்த வலைதளங்கள்ல எல்லாம் பேசறாங்க, தயவு செய்து அதுக்காக நீங்க யாரும் கஷ்டப்பட வேண்டாம். ஏன்னா, எதிர்ப்பு இருந்தால்தான் வளர முடியும்.

ஒரு செடி வளர்க்கணும்னு சொன்னா முதல்ல குழி தோண்டணும். உரம், மண்ணு கலந்துட்டு, விதையை போட்டு, அழுத்தி அழுத்தி அமுக்கறோம். ஏன்னா அது வளரணும். இந்த அவதூறுகள், திட்டுகள் எல்லாம் வந்து உரம் மாதிரி, அது நிறைய போடத்தான் நிறைய வெளிய வரும். அவங்க நமக்கு உதவி பண்ணிட்டு இருக்காங்கன்னு பலருக்குத் தெரிய மாட்டேங்குது.

ஒரு வாட்டி, புத்தர் சிஷ்யர்களோட பயணம் போயிட்டிருந்தாரு. அப்ப ஏழெட்டு பேர் வழி மறிச்சி, புத்தரைத் திட்டு, திட்டுன்னு திட்டறாங்க. அவங்க போன பிறகு சிஷ்யர்கள் கேட்டாங்க, அவங்க திட்டியும் அமைதியா இருக்கீங்களேன்னு கேட்டாரு. அதுக்கு புத்தர் அவங்க திட்டனத நான் எடுத்துக்கலையே, அதை கொட்டி அவங்களே எடுத்துட்டுப் போயிட்டாங்கன்னு சொன்னாரு.

அந்தக் காலத்துல ராஜாக்கள் கிட்ட வந்து படை பலம் இருக்கும். லட்சக் கணக்குல இருக்காது, அஞ்சாயிரம், பத்தாயிரம் இருக்கும். ஆனால், போருன்னு வரும் போது எல்லா ஆண் மக்களும் வந்து போராடுவாங்க. அதுவரைக்கும், அந்த ஆண் மக்கள், அவங்கங்க வேலையை, கடமையை செஞ்சிட்டிருப்பாங்க.

வீர விளையாட்டுக்கள் வச்சதே, அவங்களையும் வீரர்களா ஆக்குறதுக்குதான். இந்த ஜல்லிக்கட்டு, குஸ்தி, கம்புக் சண்டை, கபடி, எல்லாமே அவங்க பலமா இருக்கிறதுக்காகத்தான். போர்னு வரும் போது அவங்க மண்ணுக்காக எல்லாரும் வந்து போராடுவாங்க.

அது மாதிரி, எனக்கும் கடமைகள் இருக்கு, தொழில் இருக்கு, வேலை இருக்கு உங்களுக்கும் கடமைகள் இருக்கு, தொழில்கள் இருக்கு, வேலைகள் இருக்கு. நீங்களும் ஊருக்குப் போங்க, கடமைகளைச் செய்யுங்க, தொழில்களைப் பார்த்துக்குங்க. போர்னு வரும் போது பார்த்துப்போம், ஆண்டவன் இருக்கான்,” எனப் பேசினார்.

SHARE: