rajinikanth fans meet

கேளிக்கை வரி விவகாரம், கேட்டு விட்டார் ரஜினிகாந்த்

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த மூன்று நாட்களாகவே ‘ரஜினிகாந்த் வாயைத் திறந்து கேட்கவில்லை’ என்ற ஒரே பேச்சுதான், பேச்சு வார்த்தைகளை விட அதிகம் ஒலித்தது.

கேளிக்கை வரி விதிப்பை எதிர்த்து தியேட்டர்காரர்கள் ஸ்டிரைக் அறிவித்து தொடர்ந்து மூன்றாவது நாளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். பேச்சு வார்த்தை ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று சொன்னாலும், வேறு எந்த ஒரு முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

ரஜினிகாந்த் வாயைத் திறந்து கேட்டு ஆளும் கட்சிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் சிலர் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்கள். டி. ராஜேந்தர் ரஜினியை எதிர்த்து பேசியே விட்டார்.

ஒரு வழியாக இன்று அதிகாலை ரஜினிகாந்த் அவருடைய டிவிட்டரில் கேளிக்கை வரி விதிப்பைப் பற்றி கேட்டே விட்டார்.

“தமிழ்த் திரையுலகத்தில் லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு எங்களது கோரிக்கையை தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என, மனதார வேண்டுகோள் விடுக்கிறேன்,” என ரஜினிகாந்த் டிவீட் செய்துள்ளார்.

ரஜினிகாந்தின் இந்த டிவீட்டிற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். அதில்,

“அக்கறையுடன் உங்கள் குரலைக் கொடுத்ததற்கு நன்றி ரஜினி அவர்களே, பண்புள்ளவராக முதலில் வேண்டுகோள் விடுப்போம், அதன் பின்ன என்னவென்று பார்ப்போம்,” என கமல்ஹாசனும் டிவிட்டரிலேயே ரஜினிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.