rubai review

ரூபாய் – விமர்சனம்

திரைப்படங்களைப் பொறுத்தவரை கதை என்பது ஒரு வரியில் சொல்லக் கூடியதாக இருந்தாலும் பரவாயில்லை, திரைக்கதையில் எந்த அளவிற்கு விறுவிறுப்புடன் சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்புடன் நகரும் படங்கள் ரசிக்கக் கூடிய படங்களாகவே இருககும். அப்படி ஒரு படத்தைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அன்பழகன்.

ஒரு பைனான்ஸ் கம்பெனியில் சில கோடிகளைக் கொள்ளையடிக்கிறார் ஹரீஷ் உத்தமன். அந்தப் பணத்தை டோல்கேட்டில் போலீசின் சோதனையிலிருந்து தப்பிக்க சந்திரன், கிஷோர் ரவிச்சந்திரன், ஆனந்தி, சின்னி ஜெயந்த் ஆகிய நால்வர் சென்று கொண்டிருக்கும் மினி லாரியில் வைக்கிறார் ஹரீஷ். வழியில் ஒரு சண்டையில்தான் அந்த நால்வருக்கும் அந்த பணப்பை சிக்குகிறது.

சின்னி ஜெயந்துக்கு ஏற்படும் திடீர் மாரடைப்பிற்கு சிகிச்சைக்காக அந்தப் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள். பின்னர், மீதிப் பணத்துடன் சின்னி ஜெயந்ந்தின் சொந்த ஊரான மூணாறு நோக்கி பயணமாகிறார்கள். ஹரீஷுக்கு அந்த நால்வர்தான் பணத்தை எடுத்திருப்பது தெரிந்து அவர்களைத் தேடிச் செல்கிறார். அடுத்து என்ன என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதிக் கதை.

கோயம்பேட்டிற்கு தங்களது சொந்த லாரியை ஓட்டிக் கொண்டு வரும் சந்திரன், கிஷோர் ரவிச்சந்திரன் ஆரம்பத்திலேயே அந்தக் கதாபாத்திரங்களாகவே மனதில் பதிகிறார்கள். தொடர்ந்து படம் முழுவதும் இருவரும் யதார்த்தமான நடிப்பால் கவர்கிறார்கள்.

கையேந்தி பவன் நடத்தும் சின்னி ஜெயந்த், அவரது மகள் ஆனந்தி அவர்களது வீட்டைக் காலி செய்து கொண்டு, சந்திரன், கிஷோர் லாரியில் வீட்டுச் சாமான்களை ஏற்றிக் கொண்டு வேறு வீட்டிற்குச் செல்கிறார்கள். அதில் ஆரம்பமாகும் பயணம், கடைசியில் காரில் செல்வது வரை பயணக் கதையாகவே பரபரப்பாகவே நகர்கிறது. சின்னி ஜெயந்த், ஆனந்தி இருவரும் கூட அவ்வளவு யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

ஹரீஷ் உத்தமன் மிரட்டலான வில்லனாக நடித்திருக்கிறார். ஆணி அடிக்கும் மிஷினால் பலரை பரிதாபம் இல்லாமல் கொலை செய்யும் கொடூர வில்லனாகவே தெரிகிறார்.

மற்றும் ஆர்.என்.ஆர்.மனோகர், வெற்றிவேல் ராஜா ஆகியோரது நடிப்பும் படத்தில் குறிப்பிட வேண்டியவை.

உழைத்து சம்பாதிக்கும் பணமே ஒட்டாத போது, மற்றவர்களின் பணத்திற்கு ஆசைப்படுவது வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குனர் அன்பழகன்.