SHARE
sadhura adi 3500 review

சதுர அடி 3500 என்றதும் கட்டுமானத் தொழிலில் உள்ள பல திரை மறைவு விஷயங்களைச் சொல்லப் போகிறார்கள் என்று நினைத்து போனால், இந்தப் படம் தமிழ் சினிமாவில் வந்துள்ள மற்றுமொரு பேய்த் திரைப்படம்.

கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் அதைக் கட்டி வரும் உரிமையாளர் (?) மர்மமான முறையில் தூக்கில் தொங்குகிறார். அதைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பு இன்ஸ்பெக்டர் நிகில் மோகனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதே சமயம் இறந்து போன அந்த உரிமையாளர் பேயாக உலவுகிறார். அந்தப் பேயைப் பார்த்தாகச் சிலர் சொல்ல கொலைக்கும், பேய்க்கும் பின்னணியில் என்ன இருக்கிறது என்பது நிகில் மோகன் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் திரைக்கதையை தயாரிப்பாளரிடம் எப்படி சொல்லி இயக்குனர் ஜாய்சன் இந்த வாய்ப்பைப் பெற்றார் என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல் காட்சியில் தூக்கில் தொங்கியவரைப் பற்றி விசாரிக்க காவல் துறை அதிகாரியான ரகுமான் வருகிறார். அதன் பின் அதே வழக்கை விசாரிக்க நிகில் மோகன் வருகிறார். கதை சென்னையில் நடக்கிறதா, நாகர்கோவிலில் நடக்கிறதா என்பதிலும் பெரும் குழப்பம்.

பேய்க் கதையாகவும் இல்லாமல், கொலை பற்றிய விசாரணைக் கதையாகவும் இல்லாமல் காட்சிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் நகர்கிறது. இடையில் இனியாவை ஒருவர் துரத்தி துரத்திக் காதலிக்கும் கதை வேறு. இனியாவின் பெற்றோர்கள் எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா நகைச்சுவை என்று நம்மை படுத்தும் காட்சிகள் வேறு.

படத்தின் நாயகன் நிகில் மோகன் இன்ஸ்பெக்டர் வேடத்திற்குப் பொருத்தமாக இருக்கிறார். ஆனால், நடிப்பில் இன்னும் தேற வேண்டும்.

மனோபாலா, தலைவாசல் விஜய், சரவண சுப்பையா எல்லாரும் தனித் தனியாக படத்துடன் ஒட்டாமலே இருக்கிறார்கள்.

இந்த மாதிரியான படங்களை எந்த தைரியத்தில் எடுக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.