‘மாட்டுக்கு நான் அடிமை’, யார் இந்த சாம்பார் ராசன் ?

‘மாட்டுக்கு நான் அடிமை’, யார் இந்த சாம்பார் ராசன் ?

SHARE
mattukku naan adimai sambar rasan

சூப்பர்ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் மாதிரி நாமும் பெரிய ஸ்டார் தான் என நினைத்துக் கொண்டு, வரும்போதே பட்டத்துடன் வந்து, கோடம்பக்கத்தில் குதித்த பவர்ஸ்டாரைத் தொடர்ந்து அடுத்ததாக ‘அனிமல் ஸ்டார்’ என்கிற அடைமொழியுடன் களமிறங்கியிருக்கிறார் சாம்பார் ராசன் எனப் பெயரை வைத்துக் கொண்டிருப்பவர்.

இவர் தயாரித்து நடிக்கும் படம் தான் ‘மாட்டுக்கு நான் அடிமை’. மாட்டுக்காகவே வாழ்ந்து மாட்டுக்காகவே உயிரை விடத் தயாரான ஒருவனின் கதை தான் இந்தப் படம். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில்தான் சாம்பார் ராசன் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள். அதில் ‘கோலி சோடா’ சீதா ஒருவர். மற்றொரு நாயகியாக சௌந்தர்யா என்பவர் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இளைய குமார் பி.கே என்பவர் இயக்கியுள்ள இந்தப் படம் நம் நாட்டில் மாடு நன்றாக இருந்தால் விவசாயம் நன்றாக இருக்கும் என்கிற கருத்தை வலியுறுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ளதாம்.

இந்தப் படத்தில் நாயகன் சாம்பார் ராசன் கோவணம் அணிந்தபடி இருக்கும் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ஆனால் இதை பப்ளிசிட்டிக்காக பண்ணவில்லை என்கிறார் சாம்பார் ராசன்.

“தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்து கோவணம் கட்டி நடித்தது நான் மட்டுமே. கோவணம் தான் தமிழனின் பாரம்பரிய உடை. அதை அணிவதில் கூச்சமும் வெட்கமும் எதற்கு ?”, என்கிறார் சாம்பார் ராசன்.

சரி அது என்ன சாம்பார் ராசன் என்று கேட்டால்,

“மக்கள் ஒவ்வொருத்தர் வீட்டிலும் சாம்பார் தவறாமல் இடம் பெறும் இல்லையா. அந்தமாதிரி எல்லோர் மனதிலும் இடம்பிடிப்பதற்காக எனது பெயரையே ‘சாம்பார் ராசன் ‘என மாற்றி, அதை கெஜட்டிலும் பதிந்துவிட்டேன்,” என ஆச்சர்யப்படுத்துகிறார் சாம்பார் ராசன். இவரது பூர்விகம் கோவை.

என்னை மாதிரி யாராலும் படம் எடுக்க முடியாது என்று அடித்து சொல்கிற சாம்பார் ராசன் வேறு நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க மாட்டேன் என்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் என்பதில் தெளிவாக இருக்கும் இவர், உங்களுக்கு எந்த நடிகையுடன் நடிக்க ஆசை என்றவுடன், எனக்கு யார் கூடவும் நடிக்க ஆசை இல்லை, வருங்காலத்தில் என் கூட எல்லா ஹீரோயின்களும் நடிக்க ஆசைப்படுவாங்க, என்கிறார் தன்னம்பிக்கையுடன்.

சிரிப்புக்காக சொல்கிறாரா இல்லை, சீரியஸாக சொல்கிறாரா என அவரிடம் கேட்டால் மக்கள் எல்லோரும் என்னைப்பார்த்து சிரிக்கணும், அதுதான் என் லட்சியம் என்கிறார்.

கோவில்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் தான் இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். மாட்டைப் பற்றிய படத்தில் ஜல்லிக்கட்டு இல்லாமலா, “படத்தில் ஜல்லிக்கட்டு வச்சிருக்கேன். படங்களில் பாட்டு பாடி மாட்டை அடக்கறது அந்தக் காலம். நான் இந்தப் படத்தில் மாட்டு விஞ்ஞானி என்பதால் ஒவ்வொரு மாட்டுக்கும் தனித்தனியா பாஸ்வேர்டு கொடுத்து வச்சிருக்கேன்,” என இன்னொரு குண்டை தூக்கிப்போடுகிறார்.

ஆக, நிறைய அதிர்ச்சிகளையும், ஆச்சரியங்களையும் ரசிகர்களுக்குத் தர தயாராகி வருகிறார் இந்த ‘அனிமல் ஸ்டார்’ சாம்பார் ராசன்.

விரைவில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.