screen4screen
sangili bungili kathava thora audio launch

கமல்ஹாசன் சிறப்பித்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ இசை வெளியீடு

SHARE:

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’.

ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி மற்றும் பலர் நடிக்க கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த ஐக் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம் இது.

விஷால் சந்திரசேகர் இசையில் சிம்பு, அனிருத், ஜி.வி.பிரகாஷ்குமார், கங்கை அமரன், பிரேம்ஜி என ஐந்து இசையமைப்பாளர்கள் பாடியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

ஒரு வித்தியாசமான ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசையை கமல்ஹாசன் தன் உதவியாளர் ஐக்-குக்காக வந்து வெளியிட்டுக் கொடுத்தார்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் அட்லீ பேசியதாவது,

“இதே சத்யம் திரையரங்கில் தான் என் முதல் படம் ராஜா ராணியின் இசை வெளியீடும் நடந்தது. என் முதல் தயாரிப்பும் இந்த மேடையில் நடப்பது மகிழ்ச்சி. என் உருவத்தை பார்த்து இவன் என்ன பெருசா பண்ணிட போறான் என நினைக்காமல் ஏ.ஆர்.முருகதாஸ் சார் வாய்ப்பு கொடுத்ததால் தான் இயக்குனர் அட்லீயாக இங்கு உங்கள் முன் நிற்கிறேன். நிறைய கதைகள் கேட்டு அதில் ஒரு கதையாகத்தான் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தைத் தேர்ந்தெடுத்தேன். நான் பேய்க்கு ரொம்ப பயந்தவன். அதனால் தான் இந்த பேய் படத்தை எடுக்க நினைத்தேன்,” என்றார் அட்லீ.

இயக்குனர் ஐக் பேசியதாவது,

“கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார் என்று சொல்வது வழக்கம். அதில் ஒரு சினிமா எடுத்துப் பார் என்ற வாக்கியத்தையும் சேர்க்கணும். அவ்வளவு கஷ்டம் முதல் படத்தை எடுத்து முடிப்பது. என் குருநாதர்கள் பிரியதர்ஷன் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரிடமும் தான் நான் சினிமாவை கற்றுக் கொண்டேன். நா.முத்துக்குமார் கடைசியாக படுக்கையில் இருந்தபோது எழுதிக் கொடுத்த வரிகளை என்னால் எப்போதும் மறக்கவே முடியாது,” என்றார் இயக்குனர் ஐக்.

நாயகன் ஜீவா பேசியதாவது,

“ஐக் கதை சொல்ல வந்த போது கமல்ஹாசனின் உதவியாளர், விஸ்வரூபம் படத்தில் எல்லாம் வேலை செய்தவர் ஹாலிவுட் ரேஞ்சில் படம் இருக்கும் என நினைத்துதான் கதை கேட்க ஆரம்பித்தேன். ஆனால் முற்றிலும் மாறாக குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார். எல்லோருக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்,” என்றார் ஜீவா.

தம்பி ராமையா பேசியதாவது,

“இளமையில் உடம்போடும், முதுமையில் உயிரோடும் போராடும் ஒரு மனிதன் இடையில் வாழ்க்கையோடு போராடுகிறான். அப்படி ஜீவா, அட்லீ, ஐக், விஷால் சந்திரசேகர் ஆகிய 4 இளைஞர்கள் வாழ்க்கையில் சாதிக்கப் போராடிக் கொடுத்துள்ள படம் தான் சங்கிலி புங்கிலி கதவ தொற, நிச்சயம் வெற்றி பெறும்,” என்றார்.

வழக்கம் போல கலகலப்பாக பேசிய ராதாரவி,

“ராதாரவி இன்று இந்த நிலையில் இருப்பதற்கு நாயகன் ஜீவாவின் அப்பா ஆர்.பி.சௌத்ரியும் ஒரு முக்கிய காரணம். என் மகனை சினிமாவில் வரவைக்க ஆசைப்பட்டேன். சினிமாவில் நிறைய நன்றி கெட்டவர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தானோ என்னவோ அவனுக்கு சினிமா பிடிக்கவில்லை. அப்பா ஒரு துறையில் இருந்தால் மகனும் அதே துறைக்கு வருவது தான் இயல்பு. சரவணா ஸ்டோர்ஸ் வாரிசு விளம்பரத்துல ஆடினப்போவே நடிக்க வருவான்னு நினைச்சேன்.

இந்தி படமாக இருந்தாலும் சரி, மொழியாக இருந்தாலும் சரி எனக்கு ஆகாது. அப்படி இந்தி படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பிரியதர்ஷனிடம் ஐக்கை சேர்த்து விட்டேன். பிறகு கமல்ஹாசனிடம், கமலை அழ வைத்த ஒரே படமான விஸ்வரூபம் படத்தில் வேலை பார்த்தான். ஐக் கடுமையான உழைப்பாளி. இந்தப் படத்தை சிறப்பாக எடுத்துள்ளான்.

நான் நடிக்க வந்தப்போ இந்த ஹாலிவுட் கம்பெனி படங்கள்ல நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். அது இப்போது சாத்தியமாகியுள்ளது. அந்த எல்லா ஹாலிவுட் கம்பெனிகளும் இங்கே குப்பை கொட்டி கொண்டு இருக்கிறார்கள். சம்பள விஷயம் தொடங்கி எல்லாவற்றையும் பர்ஃபெக்டாக செய்யும் அவர்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் எடுக்க வேண்டும்.

என்னை வாழவைத்த பத்திரிக்கை, வாழ வைத்துக் கொண்டிருக்கும் இணையதளம் எல்லாவற்றிற்கும் நன்றி. யூ டியூப்ல நான் பேசுனத போட்டு என்னை இரண்டு தடவ போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பிட்டாங்க. நிறைய பேரு விழாவுக்கு வரலன்னு வருத்தப்பட்டாங்க, வாழ்த்தணும்னு வர்றவங்க மட்டும் போதும். வாழும் வரை எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். தமிழ்நாடு முழுக்க எங்கள் குடும்பத்துக்கு கிளைகளை திறந்து வைத்திருக்கிறார் எங்கள் அப்பா. அதனால் இந்த படம் பெரிய வெற்றி பெறும்,” என்றார் ராதாரவி.

கமல்ஹாசனின் பேச்சில் அரசியல் கிண்டலும் கலந்திருந்ததில் ஆச்சரியமில்லை. அவர் பேசியதாவது,

“சினிமா ரசிகர்களுக்கே உண்டான பெருமை, உங்களுக்கு முன்னாடியே நான் டிரைலரை பார்த்துட்டேன் என் சொல்லிக் கொள்வது தான். அப்படி இந்த படத்தின் டிரைலரை நான் பார்த்து விட்டேன் என சொல்வதில் எனக்குப் பெருமை. இந்த படம் நன்றாக கவர் செய்யப்பட்ட படம், தெர்மாகோலால் அல்ல. ஆவி படம் என்றவுடன் தெர்மாகோல் நினைவிற்கு வந்து விட்டது. தவறாக நினைக்க வேண்டாம்,” கிண்டலடித்துவிட்டு படத்தின் இசையை வெளியிட்டார் கமல்ஹாசன்.

நிகழ்ச்சியில் நாயகி ஸ்ரீதிவ்யா, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் சிஇஓ விஜய் சிங், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், நடிகர் கிருஷ்ணா, பாடலாசிரியர் விவேக், பாடகி சக்திஸ்ரீ கோபாலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

SHARE: