screen4screen
saravanan irukka bayamen

சரவணன் இருக்க பயமேன் விமர்சனம்

ஒரு மிகப் பெரும் அரசியல் கட்சியின் வாரிசாகக் கருதப்படும் உதயநிதி ஸ்டாலின், இப்படி ஒரு ‘காமெடி’ அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார் என்பதுதான் நமது முதல் கேள்வி.

அதிலும் அந்தக் கட்சியின் பதவியைக் கூட நண்பர் சூரியை விரட்டி விட்டு கைப்பற்றுகிறார்கள்.

‘மனிதன்’ படம் மூலம் மெச்சூரிட்டியான படங்களில், கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய இமேஜை உயர்த்திக் கொண்டவர், இப்படி ஒரு ‘மட்டமான’ கதை கொண்ட படத்தில் நடித்திருக்கவே கூடாது. படத்தின் முழு கதையையும், காட்சிகளையும் கேட்டுதான் நடிக்க சம்மதித்தாரா என்ற கேள்வி படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் எழும்.

ஒரு காமெடி கூட்டத்தை வைத்துக் கொண்டு, இமான் இசையில் இனிமையான இரண்டு பாடல்களை வைத்துக் கொண்டு, நடிகர், நடிகைகள் என்ன பேசுகிறார்களோ, பேசட்டும், அப்படியே படத்தை முடித்து விடலாம் என இயக்குனர் எழில் நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

ஜாலியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின், ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் என்ற பொறுப்பை, சூரியிடமிருந்து தட்டிப் பறித்துக் கொள்கிறார். சிறு வயதில் ஊரை விட்டுப் போன அவர்களது குடும்ப நண்பரின் மகள் ரெஜினா மீண்டும் ஊருக்கு வருகிறார். சிறிய வயதில் எப்படி சண்டை போட்டுக் கொண்டார்களோ, அப்படியே மீண்டும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் உதயநிதியும், ரெஜினாவும்.

ஆனால், உதயநிதிக்கு ரெஜினா மீது காதல். இருந்தாலும் ரெஜினாவுக்கும், அந்த ஊர் காமெடி பெரிய மனிதர் (?) மன்சூரலிகான் மகன் சாம்ஸ்-க்கும் திருமணம் நிச்சயிக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் உதயநிதியின் முன்னாள் கல்லூரித் தோழியான சிருஷ்டி டாங்கே, உதயநிதிக்கு ஆவியாக காட்சி தருகிறார். தன் தோழி ஆவியிடம் தன் காதலுக்கு உதவி கேட்கிறார் உதயநிதி. கதை சொன்னது போதும் என நீங்கள் கேட்பது புரிகிறது…இதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

உதயநிதி ஸ்டாலின், படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டோம், நடித்து முடித்து விடுவோம் என்ற ரீதியில் நடித்தது போலத்தான் தெரிகிறது. அவருடைய முந்தைய படங்களில் நடித்ததை விட இந்தப் படத்தில் சரிபாதி தான் நடித்திருக்கிறார். ஆனால், இரண்டு டூயட்களில் மட்டும் சானல்களில் அடிக்கடி பாடல்களைப் போடவார்களே என கவனமாக நடித்திருக்கிறார்.

ரெஜினா, வழக்கம் போல தமிழ் சினிமாவின் லூசுப் பெண் கதாநாயகியாகவே தெரிகிறார். இவருக்குள் சிருஷ்டியின் ஆவி புகுந்து கொள்வது எல்லாம் எந்த விதத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.

ஒரு பாட்டு, நான்கைந்து காட்சிகள் அத்துடன் சிருஷ்டியின் வேலை முடிந்து விடுகிறது.

படத்தின் நகைச்சுவைப் பகுதிக்கு சூரி தான் பொறுப்பு என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஒரு காட்சியிலாவது சிரிக்க வைப்பார் என்று பார்த்தால் பொறுமையை சோதிக்கிறார். யோகி பாபு மட்டும் இல்லை என்றால் அந்த ஒரு சில காட்சிகளில் கூட சிரித்திருக்க மாட்டோம்.

ரவி மரியா, ரோபோ சங்கர் சிறப்புத் தோற்றமெல்லாம் ஐயகோ, ஆள விடுங்க சாமி என சொல்ல வைக்கிறது.

இமான் இசையில் ‘எம்புட்டு இருக்குது, லாலா கடை சாந்தி’ பாடல்கள்தான் படத்திற்கு அடையாளம். அந்தப் பாடல்களை அடிக்கடி டிவியில் போடப் போகிறார்கள்.

அப்புறம் என்ன ?, படம் பார்க்கலாமா என்று கேட்கிறீர்களா..?.

‘பாகுபலி 2’ பார்த்த கண்களால், இந்த ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தையும் பார்க்க வைத்துவிட்டார்களே…

SHARE: