screen4screen
savarakathi-movie-review

சவரக்கத்தி விமர்சனம்

‘கத்தி’யை கையில் எடுத்த நாயகர்கள், வில்லன்கள் ஆகியோரை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், அந்தப் படங்களில் சொல்லாமல் விட்ட ஒரு உன்னதமான கருத்தை இந்த ‘சவரக்கத்தி’ படத்தில் சொல்லி நம்மை உருகவும் வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜி.ஆர். ஆதித்யா.

S4S Rating - 4/5

படத்தின் நாயகனான ராம் கையில் நம் உடலைத் திருத்தும் சவரக்கத்தி, வில்லனான மிஷ்கின் கையில் உடலையும், உயிரையும் குலைக்கும் கத்தி. இந்த ‘கத்தி’ எதற்குப் பயன்பட வேண்டும் என்று ஆணித்தரமான முடிவுடன் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.

முடி திருத்தும் பார்பர் ஆக இருக்கும் ராம், தன் மச்சானுக்குத் திருமணம் நடத்தி வைப்பதற்காக, மனைவி, குழந்தைகளுடன் பைக்கில் செல்கிறார். செல்லும் வழியில் ஒரு சிக்னலில், வேகமாக வந்து நின்ற ஜீப் ஒன்றால், ராம் தடுமாறி கீழே விழுகிறார். கோபமாக எழும் ராம், ஜீப்பில் உள்ள ரவுடியான மிஷ்கினை அடித்துவிட்டு சென்று விடுகிறார். யாரோ  ஒரு சாதாரண ஆளிடம் அடி வாங்கியதைத் தாங்க முடியாத மிஷ்கின், ராமைத் தேடிக் கண்டுபிடித்து கொலை செய்யத் துடிக்கிறார். மிஷ்கின் தேடுவதை அறிந்த ராம் அவரிடமிருந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறார். மிஷ்கினும் விடாமல் துரத்துகிறார். இந்த துரத்தல் போட்டியில் யார் வென்றார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

மிஷ்கின், ராம் போன்ற சீரியசான படங்களைக் கொடுக்கும் இயக்குனர்கள் நடித்திருக்கும் படம், இந்தப் படமும் சீரியசாகத்தான் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. படத்தின் ஆரம்பத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரையிலும் நகைச்சுவையோடு கலந்த திரைக்கதையும், வசனமும் அமைந்து படம் அவ்வளவு கலகலப்பாக நகர்கிறது. வழக்கமான நகைச்சுவைப் படங்களில் இருந்தும் இது ஒரு மாறுபட்ட நகைச்சுவைப் படமாகவும் அமைந்து ரசிக்க வைக்கும்.

பிச்சைமூர்த்தியாக நடிப்பில் ‘பிச்சி’ எடுத்திருக்கிறார் ராம். வாயைத் திறந்தாலே பொய் பேசுபவர் என்ற கதாபாத்திரத்தில், அவரைப் பார்க்கும் போது அப்படியே பொருந்திப் போயிருக்கிறார். நகைச்சுவை நடிப்பும் அவருக்கு இயல்பாக வருகிறது. மிஷ்கின் துரத்தி வரும் போது, அவர் யார் எப்படிப்பட்டவர் எனத் தெரியாமல் பார்க்கில் உடற்பயிற்சி செய்து கொண்டு காத்திருக்கிறார். மிஷ்கினின் சுயரூபம் தெரிந்ததும், அவர் எடுக்கும் ஓட்டம் கடைசி வரை நிற்கவில்லை. கிளைமாக்சில் மகன் கண் முன் தானும் ஒரு சண்டைக்காரன்தான், யாரையும் அடிப்பேன் என அவர் எடுக்கும் விஸ்வரூபம் சிம்ப்ளி சூப்பர்ப். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் வேறு எந்த ஹீரோவையும் நடிக்க வைத்திருந்தால் கூட இப்படி நடித்திருக்க மாட்டார்கள். ராம் தேர்வு மிகச் சரியான தேர்வு.

அதே போல வில்லன் மங்காவாக மிஷ்கின், மற்றுமொரு சிறப்பான தேர்வு. வழக்கமான ரவுடியாகவும் இருக்கக் கூடாது, அதில் கொஞ்சம் காமெடித்தனமும் இருக்க வேண்டும். பிரகாஷ்ராஜ், நாசர், சம்பத், நரேன் என வழக்கமான நடிகர்களைத் தேர்வு செய்யாமல் இருந்ததற்கே இயக்குனர் ஆதித்யாவுக்கு தனி பாராட்டு. உடல் மொழி, உருட்டிக் கொண்டிருக்கும் கண்கள், கோபத்தில் அடிக்கடி கத்துவது என ‘மங்கா’ கதாபாத்திரத்திற்கு தனி உருவம் கொடுத்திருக்கிறார் மிஷ்கின். ஆரம்பக் காட்சியில் ஒரு ஹோட்டலில் ஒரு பெண்ணை முறைத்துக் கொண்டேயிருக்கும் காட்சியில் இருந்து, கிளைமாக்சில் 6 மணி ஆகிவிட்டது போகலாம் என டக்கென எழுந்து கிளம்புவது வரை ஒவ்வொரு காட்சியிலும் மங்காத நடிப்பு மிஷ்கினிடம்.

பூர்ணா நடித்த சுபத்ரா கதாபாத்திரத்தில் சில நடிகைகள் நடிக்க மறுத்துவிட்டார்களாம். அந்த நடிகைகளுக்கு நன்றி. இல்லையென்றால் பூர்ணா நமக்குள் உணர வைத்த சுபத்ரா கதாபாத்திரத்தை அவர்கள் உணர வைக்கத் தவறியிருப்பார்கள். இந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிக் கேட்டதுமே நடிக்க சம்மதித்த பூர்ணாவின் நடிப்பார்வம், படத்தில் ஒரு காட்சியிலும் குறையவில்லை. எவ்வளவு படங்களில் நடிக்கிறோம், எத்தனை கோடிகளை சம்பாதிக்கிறோம் என்று நினைக்காமல் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் பூர்ணாவின் நடிப்பார்வத்தை இன்னும் பல இயக்குனர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மற்ற கதாபாத்திரங்களில் சில காட்சிகளில் வரும் நடிகர்கள் கூட அவர்களது முத்திரையைப் பதித்துவிட்டுப் போகிறார்கள். அவர்களும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என அவர்களுக்கும் சிறப்பான காட்சிகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதிலும், மிஷ்கினிடம் இருக்கும் அடியாட்களில் கீதா ஆனந்த் மற்றவர்களைக் காட்டிலும் தனித்துத் தெரிகிறார்.

பூர்ணாவின் மாற்றுத்திறனாளி தம்பி, அவருடைய காதலி, அந்தக் காதலியின் அப்பா அம்மா ஆகியோரை வைத்தும் ஒரு காதல் டிராக், படத்துடன் ஒன்றிணைந்து வந்து படம் முடிவதற்கும் காரணமாய் அமைகிறது. அவர்கள் அனைவரும் சில காட்சிகளில் வந்தாலும் மனதில் அழுத்தமாய் பதிகிறார்கள். மாற்றுத் திறனாளியைத் காதலியின் அம்மா சங்கீதா பாலன் கை கொடுத்து தூக்கும் அந்த ஒரு காட்சியிலேயே வசனமேயில்லாமல் சங்கீதாவின் சம்மதத்தை உணர வைத்துவிடுகிறார் இயக்குனர். இப்படி பல காட்சிகளில் இயக்குனரின் தனி முத்திரை வெளிப்படுகிறது.

அரோல் கொரேலியின் பின்னணி இசை கதையின் தன்மையில் இருந்து சிறிதும் விலகாமல் சேர்ந்தே பயணிக்கிறது. கார்த்திக்கின் ஒளிப்பதிவு கதையின் யதார்த்தத்தை காட்சி வடிவில் நமக்கு இன்னும் அழுத்தமாய் ரசிக்க வைக்கிறது. ஜுலியன் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் படத் தொகுப்பைச் செய்திருக்கிறார்.

ஒரு நாளுக்குள் நடந்து முடியும் கதை. நாயகனும் ஓடுகிறார், நாயகியும் ஓடுகிறார், வில்லனும் ஓடுகிறார்,   கூடவே நாமும் ஓடுகிறோம். கதைக்குள் சேர்ந்து நாமும் பயணிக்கும் உணர்வுதான் ஏற்படுகிறது.

அனைத்தையும் சிறப்பாகச் செய்த இயக்குனர் முக்கியக் கதாபாத்திரங்களான ராம், மிஷ்கின், பூர்ணா ஆகியோரின் மிகை நடிப்பை மட்டும் சில காட்சிகளில் கொஞ்சம் குறைத்திருக்கலாம். அது மட்டுமே யதார்த்தமான ஓட்டத்தில் கொஞ்சம் தனித்துத் தெரிகிறது.

SHARE: