soori comedy actor

என் அப்பாதான் எனக்கு ஹீரோ – சூரி

தமிழ்த் திரையுலகில் நகைச்சுவையில் வடிவேலு, சந்தானம் இருவரும் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள்.

இருவருக்குமே நாயகனாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற ஏற்பட்டதால், அந்த வெற்றிடத்தை பலரும் நிரப்ப முயற்சித்தார்கள். ஆனால், அந்த வெற்றிடத்தை ஓரளவிற்காவது நிரப்பியவர் சூரி மட்டுமே.

அவரை விட்டால் இப்போதைக்கு நகைச்சுவை நடிகர் என்று சொல்லிக் கொள்ளும்படி யாருமில்லை.

தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சூரி நேற்று பத்திரிகையாளர்களை முதல் முறையாகச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர்,

“என்னுடைய ஹீரோ என்றால் அது என்னுடைய அப்பாதான். என் அப்பாவின் நகைச்சுவையில் நான் இன்னும் 50 சதவீதம் கூடச் செய்யவில்லை என்பதே உண்மை. அதைப் பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

20 வருடங்களுக்கு முன்பாக சென்னைக்கு வந்தேன். பல வேலைகளைப் பார்த்திருக்கிறேன். நாடகம் போட்டிருக்கிறேன், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்திருக்கிறேன்.

நான் யார் என்பதை வெளி உலகத்திற்கு ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் காட்டியவர் அண்ணன் சுசீந்திரன். எனக்கு அவர் கொடுத்த சிறு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் மனதில் இடம் பிடித்து அந்தப் படத்தில் நிறைய காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அப்படி வந்த காட்சிதான் பரோட்ட காட்சி. அதுதான் என்னை ரசிகர்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்த்தது.

தொடர்ந்து நிறைய படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் நடிப்பு நன்றாக இருந்தால் அதைப் பற்றிப் பலரும் பாராட்டி எழுதியதைப் பார்த்திருக்கிறேன்.

நகைச்சுவையில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். நாயகனாக நடிக்கும் ஆசையெல்லாம் கொஞ்சமும் கிடையாது.

எனக்கும் என் குடும்பத்திற்கும் மட்டுமல்லாது, என் கூடப் பிறந்தவர்களின் குடும்பத்திற்காகவும் நிறைய செய்ய வேண்டும், செய்து கொண்டும் இருக்கிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி,” என்றால் சூரி.