SHARE
tv-satellite-rights

‘இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக’ , ‘திரைக்கு வந்து சில மாதங்களே ஆன’, என்று டிவிக்களில் அறிவிக்கப்பட்டு ஒளிபரப்பப்படும் புத்தம் புதிய திரைப்படங்களைப் பார்க்கத்தான் நமது மக்களுக்கு ஆர்வம் அதிகம்.

தியேட்டர்களுக்குச் சென்று சுமார் 1000 ரூபாய் வரை செலவழித்து படம் பார்க்கும் அளவிற்கு இல்லாத நடுத்தர மக்கள் டிவிக்களில் ஒளிபரப்பப்படும் இப்படிப்பட்ட புதிய படங்களை  மாதம் 100 ரூபாய் செலவில் பார்த்து விடுகின்றனர்.

கடந்த சில வருடங்களாக புத்தம் புதிய படங்களை வாங்க டிவிக்களிடையே ஆர்வம் குறைந்தது. பல கோடி ரூபாய் கொடுத்து அந்தப் படங்களை வாங்கி, ஒளிபரப்பு செய்யப்படும் போது விளம்பர வருவாய் மூலம் படங்களுக்குக் கொடுத்த பணத்தைத் திரும்ப ஈட்ட முடியாமல் போய் வந்தது.

ஆனால், இப்போது டிஜிட்டல் யுகத்தில் மொபைல் ஆப்ஸ்கள் மூலம் தனியாகக் கட்டணம் வசூலித்து அந்தப் பணத்தையும் திரும்பப் பெறும் வழி வந்துவிட்டது.

விஜய் டிவி ‘ஹாட் ஸ்டார்’ என்ற ஆப்பை நீண்ட நாட்களாகவே பயன்படுத்தி வருகிறது. சன் டிவி ‘சன் நெக்ஸ்ட்’ என்ற ஆப்பை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அது மட்டுமல்லாமல் ‘அமேசான் பிரைம்’ என்ற நிறுவனம் ஏற்கெனவே களத்தில் குதித்து பல புதிய படங்களை வாங்கிக் குவித்துள்ளது.

இந்த புதிய வியாபாரத்தால் தற்போது அனைத்து டிவிக்களும் பல புத்தம் புதிய படங்களை பல கோடி கொடுத்து வாங்கிக் குவித்து வருகின்றன.

ஜீ டிவி ஏற்கெனவே ரஜினிகாந்த், எமி ஜாக்சன் நடிக்கும் ‘2.0’ படத்தின் டிவி உரிமைகளை 110 கோடி கொடுத்து வாங்கியிருந்தது. தற்போது விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தை 30 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவி ‘அறம், குலேபகாவலி, சத்யா, மன்னவன் வந்தானடி, சிவகார்த்திகேயன் – பொன்ராம் படம்’ உள்ளிட்ட பல புதிய படங்களை வாங்கி வருகிறது.

விஜய் டிவி சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் ‘வேலைக்காரன்’ படத்தை வாங்கியுள்ளது.

இதனால், தற்போது முன்னணி டிவி நிறுவனங்களிடையே புதிய படங்களை வாங்குவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

முன்பெல்லாம் தாங்கள் வாங்கும் படங்களை வெளியில் சொல்லாத டிவி நிறுவனங்கள், தற்போது பத்திரிகைச் செய்தி வெளியிடும் அளவிற்கு அவற்றைப் பற்றி வெளிப்படையாக அறிவிக்கின்றன.

நீண்ட நாட்களாக இப்படி ஒரு போட்டி இல்லாமல் இருந்ததால் சோர்ந்து போயிருந்த திரையுலகினர் இப்போது சந்தோஷத்தில் இருக்கிறார்களாம்.

அப்படியே, சிறிய படங்களையும் அவர்கள் வாங்கினால் நன்றாக இருக்கும் என பட்ஜெட் தயாரிப்பாளர்கள் கருதுகிறார்கள்.