screen4screen
ulkuthu-movie-review

உள்குத்து – விமர்சனம்

SHARE:

கடற்கரை சார்ந்த கதைகளைக் கொண்ட படங்கள் என்றாலே தமிழ் சினிமாவில் ஒரு கவனத்தை ஈர்க்க வைக்கும். அப்படி ஒரு படமாக வந்திருக்கிறது கார்த்திக் ராஜு இயக்கியுள்ள ‘உள் குத்து’.

S4S Rating - 3.25/5

உள்குத்து - பாசக் குத்து...

பாசமும், பழி வாங்கலும் பின்னிப் பிணைந்த கதை. அதை மிகவும் யதார்த்தமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

வெளியூரிலிருந்து வேலை தேடி முட்டம் பகுதிக்கு வேலைக்கு வருகிறார் தினேஷ். அங்கு மீன் வெட்டும் வேலை செய்யும் பாலசரவணனிடம் வேலைக்குச் சேர்கிறார். பார்க்க அப்பாவியாக இருக்கும் தினேஷ், அந்தப் பகுதியில் தாதாவாக இருக்கும் சரத் லோகித்சவாவின் மகனான திலீப் சுப்பராயனை ஒரு நாள் திடீரென கொலை செய்கிறார். அதோடு, சரத்தின் ஆட்கள் சிலரைக் கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார். அவர் ஏன் அந்தக் கொலைகளைச் செய்கிறார், அதற்கான காரணம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

யதார்த்தமான கதைகளுக்கு யதார்த்தமான முகங்கள் கூடுதல் பலத்தைச் சேர்க்கும். அப்படி இந்தப் படத்தில் நாயகன், நாயகி, வில்லன்கள், காமெடியன் என அனைவரையும் பார்த்துப் பார்த்து பொருத்தமாகத் தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர்.

வெறும் லுங்கி, பனியன் என சாதாரண இளைஞன் தோற்றத்தை தன் ஆடையிலேயே கொண்டு வந்துவிட்டார் தினேஷ். மீதி வேலையை அவருடைய திக்கித் திணறும் பேச்சும், உடல் மொழியும் செய்து விடுகிறது. ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது கண்களையும் சேர்த்து வெறித்துப் பார்த்து நடித்திருக்கிறார். சினிமாத்தனமில்லாத தினேஷை இந்த ‘உள்குத்து’ வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு போய் சேர்க்கும்.

அறிமுகப் படமான ‘அட்டகத்தி’ படத்திற்குப் பிறகு தினேஷ், நந்திதா மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள். பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்தில் தற்போது இருக்கும் நாயகிகளில் இயல்பான அழகுடன், யதார்த்தமான நடிப்புடன் நந்திதா நிறையவே முந்திச் செல்கிறார்.

சரத் லோகித்சவா பெரிய தாதாவாகவும், அவரது மகனாக திலீப் சுப்பராயன் சின்ன தாதாவாகவும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். அதிலும் சரத் கபடி ஆடிக் கொண்டே பிடிக்காத செயலைச் செய்தவர்களின் கழுத்தைப் பிடிப்பது பகீர் ரகம். திலீப் சுப்பராயன் இன்னும் முயற்சித்தால் அடுத்த பிரகாஷ் ராஜ் ஆகவும் வரலாம், அவ்வளவு கோபமாக நடித்திருக்கிறார்.

பாலசரவணன் நகைச்சுவை நடிப்பை விட குணச்சித்திர நடிப்பில் கவர்கிறார். தினேஷ் அக்காவாக சாயா சிங், மாமாவாக ஜான் விஜய் கொஞ்ச நேரமே வந்தாலும் கண்ணீர் வரவைத்து விடுகிறார்கள்.

மெலடி பாடல்களில் இந்தக் காலத்து இளையராஜாவாகவே மாறி வருகிறார் ஜஸ்டின் பிரபாகரன். ‘குறு குறு கண்ணால…, பிசையும் எசையா…,’ பாடல்கள் ரிபீட்டாகக் கேட்க வைக்கின்றன.

பழைய பழி வாங்கும் பார்முலா கதைதான், இருந்தாலும் யதார்த்தமாக சொல்லிய விதத்தில் ‘உள்குத்து’ உணர்வுபூர்வமாய் அமைந்துள்ளது.

SHARE: