விஜய் கையில் எடுக்கும் தமிழன் அடையாளம்

விஜய் கையில் எடுக்கும் தமிழன் அடையாளம்

SHARE
mersal single launch

இன்றைய நாளில் அரசியல் நிலவரமே கடும் சூடாகிப் போயிருக்க, விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின்  ‘ஆளப் போறான் தமிழன்’ என்ற பாடலின் வெளியீடும் கொஞ்சும் சூட்டைக் கிளப்பியிருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாகவே ‘ஆளப் போறான் தமிழன்’ என்பதை விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் டிரென்டிங்கில் விட்டு வந்தனர். இன்று காலை முதலே மற்ற சினிமா விஷயங்களை மறக்கடிக்கும் அளவிற்கு ‘ஆளப் போறான் தமிழன்’ பாடல் பற்றிய பேச்சுக்களே சமூக வலைத்தளங்களில் அதிக இடத்தைப் பிடித்திருந்தது.

விஜய்யின் முக்கிய போட்டியாளரான அஜித் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘விவேகம்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘சர்வைவா’ என ஆங்கிலம் பாடிக் கொண்டிருக்க, விஜய்யின் ‘மெர்சல்’ பாடல் ‘ஆளப் போறான் தமிழன்’ என அவருடைய தமிழன் என்ற அடையாளத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

பாடலில் இடம் பெற்றுள்ள வரிகளிலும் “அன்பக் கொட்டி எங்க மொழி அடித்தளம் போட்டோம்.. மகுடத்தத் தரிக்கிற ‘ழ’கரத்தச் சேத்தோம்” என தமிழின் பெருமையைக் குறிப்பிடுவதாகவும் அமைந்துள்ளது.

விஜய்யின் அரசியல் ஈடுபாடு எப்படி என்பது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, மற்றவர்களுக்கும் தெரியும்.

விஜய் படங்களில் அவருடைய ஓபனிங் அறிமுகப் பாடல் எப்போதுமே சூப்பர் ஹிட் வரிசையில் இடம் பெறும். அந்த வரிசையில் ‘ஆளப் போறான் தமிழன்’ பாடலும் இடம் பிடிக்கும் என்பது பாடலை முதல் முறை கேட்கும் போதே தோன்றுகிறது.

இந்த ஒரு பாடல் பேசும் அரசியலை, படமும் பேசுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.