Yaagam Movie Press Meet

ஜெயப்பிரதாவுக்காக நடிக்க சம்மதித்த நெப்போலியன்

நரசிம்மா இயக்கத்தில் ஆகாஷ் குமார், மிஸ்தி சக்ரவர்த்தி, நெப்போலியன், ஜெயப்பிரதா, நாசர், பொன்வண்ணன் மற்றும் பலர் நடிக்க உருவாகியுள்ள படம் ‘யாகம்’.

தீய சக்திக்கும், நல்ல சக்திக்கும் இடையில் நடைபெறும் கதையைக் கொண்ட இந்தப் படத்தை அதிக கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக்கியிருக்கிறார்கள். இயக்குனர் ஷங்கரிடம் பல படங்களுக்கு உதவியாராகப் பணியாற்றிய நரசிம்மா, இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இயக்குனர் நரசிம்மா, இசையமைப்பாளர் கோட்டி மற்றும் ஆகாஷ் குமார், மிஸ்தி சக்ரவர்த்தி, நெப்போலியன், ஜெயப்பிரதா, நாசர், பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும், இயக்குனர்கள் பாலசேகரன், ஹோசிமின்,  அறிவழகன், ஆடம் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

இந்தப் படத்தில் ஜெயப்பிரதாவின் ஜோடியாக நெப்போலியன் நடித்துள்ளார். அது பற்றி கலகலப்பாக பேசினார் நெப்போலியன்.

“எனது மகனின் மருத்துவ சிகிச்சைக்கான நான் அமெரிக்காவில் இருக்கிறேன். அப்போது இயக்குனர் நரசிம்மா என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். நான் இதுவரை இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்ததில்லை. அவருடைய உதவியாளர் இயக்கத்திலாவது நடிக்கலாமே என இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன்.

அவர் கதை சொல்லும் போது எனக்கு ஜோடியாக ஜெயப்பிரதா நடிப்பார்கள் என்றார். அதைக் கேட்டதும் உடனே நடிக்க சம்மதித்தேன். நான் மத்திய அமைச்சராக இருந்த போது, ஜெயப்பிரதா எம்.பி.யாக இருந்தார். அவரும் ஹேமமாலினியும் பாராளுமன்றத்திற்கு வந்தால், அனைத்து எம்.பி.க்களுமே அவர்களைப் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள்.

அந்தக் காலத்தில் அனைவரும் வியந்து பார்த்த நடிகையான ஜெயப்பிரதாவின் ஜோடியாக நடித்தது எனக்குப் பெருமைதான்,” என்றார் நெப்போலியன்.

நிகழ்ச்சியில் பேசிய நாசர், பொன்வண்ணன் ஆகியோர் கூட ஜெயப்பிரதாவைப் புகழ்ந்து பேசத் தவறவில்லை. அனைவரும் தன் அழகைப் பாராட்டிப் பேசியதைக் கேட்ட ஜெயப்பிரதா ரொம்பவே வெட்கப்பட்டார்.