SHARE
yeidhavan movie gallery

நாட்டில் கல்வி முறையில் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், மறுபக்கம் வசதியற்ற மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் நகரம், மாநகரத்தில் இருக்கும் மாணவர்களுடன் போட்டி போட முடியாத சூழ்நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள்.

கல்வி இங்கு வியாபாரம் ஆகிவிட்டது. அதைத் தடுக்க வேண்டிய அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாத நடுத்தரக் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

இந்த ‘எய்தவன்’ படமும் கல்வி வியாபாரக் கொள்ளையைப் பற்றிய படம்தான். ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வலி, வியாபாரக் கொள்ளையால் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை நமக்கும் வலிக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குனர் சக்தி ராஜகேசகரன்.

பிளஸ் 2 படிக்கும் தங்கை, பெற்றோர் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கலையரசன். தங்கை பிளஸ் 2 வில் நல்ல மார்க் எடுத்தாலும் அரசு மருத்துவக் கல்லூரியில் கட்-அப்-ஆல் இடம் கிடைக்காமல் போய்விடுகிறது. தங்கையின் டாக்டர் ஆசையை நிறைவேற்ற தனியார் கல்லூரியில் நன்கொடை கொடுத்து சீட் வாங்குகிறார் கலையரசன். பணத்தைக் கொடுத்த பின்தான் அந்தக் கல்லூரிக்கு அங்கீகாரம் ரத்தான விவரம் அவருக்குத் தெரிய வருகிறது. பணத்தை வாங்கிய இடைத் தரகர் மூலம் மீண்டும் பணத்தைப் பெறும் முயற்சியில் இறங்குகிறார் கலையரசன். எதிர்பாராத விதமாக தங்கை விபத்தில் இறக்க, அதற்குக் காரணமானவர்களைப் பழி வாங்கப் புறப்படுகிறார் கலையசரன். அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கலையரன் தனி நாயகனாக நடித்திருக்கும் முதல் படம். வளரும் நாயகன்தான் என்றாலும் அவருக்கு முன்னணி ஆக்ஷன் ஹீரோவுக்குரிய பில்ட்-அப்புகளைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். தன் கதாபாத்திரத்தை உணர்ந்து, அளவாகவே நடித்திருக்கிறார் கலையரசன். நடுத்தரக் குடும்பத்து நாயகனாக பொருத்தமாக இருக்கிறார். இம்மாதிரியான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்தால் முன்னணிக்கு வந்துவிடலாம்.

படத்தின் நாயகியாக சாட்னா டைட்டஸ். எஸ்.ஐ. ஆக இருக்கிறார். ஆனால், ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர இவருடைய உதவியை காதலனான கலையரசன் கேட்கவேயில்லை. நடுநடுவில் காணாமல் வேறு போய்விடுகிறது இந்த நாயகியின் கதாபாத்திரம். கலையரசனின் போராட்டத்தில் இவருடைய கதாபாத்திரத்தையும் முழுமையாக இணைத்திருக்கலாம்.

பணக்கார வில்லனாக சரித்திரன். அவருடைய நடிப்புக்குப் பின்னணிக் குரல் பெரிதும் உதவியிருக்கிறது. கலையரசனுக்கு ஆரம்பத்தில் உதவி செய்யும் அந்த லோக்கல் ரவுடி கண்களாலேயே மிரட்டுகிறார். ஆடுகளம் நரேன் எந்தக் கதாபாத்திரத்திலும் பொருந்தி விடுகிறார்.

பார்த்தவ் இளங்கோ படம் முழுவதும் வாசித்துக் கொண்டேயிருக்கிறார். சில காட்சிகளில் வசனத்தைக் கேட்க விடாமல் பின்னணி இசை அதிகம் ஒலிக்கிறது. அடுத்த படங்களில் இதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இடைவேளை வரை யதார்த்தமாய், பரபரப்புடன் நகர்கிறது படம். இடைவேளைக்குப் பின் திரைக்கதை ஓட்டம் வேகம் குறைந்துவிடுகிறது. இன்னும் அழுத்தமான முடிச்சுகளைப் போட்டிருந்தால் ‘எய்தவன்’ இன்னும் எகிறி அடித்திருப்பான்.