screen4screen
yemaali review

ஏமாலி – விமர்சனம்

தமிழ்ப் படங்களில் உண்மையிலேயே  ஒரு வித்தியாசமான முயற்சி இந்த ‘ஏமாலி’. இப்படி ஒரு திரைக்கதை ஆக்கத்தில் இதுவரை எந்தப் படமும் வந்ததில்லை என தாராளமாகச் சொல்லலாம்.

S4S Rating - 2/5

இயக்குனர் வி.இசட்.துரை திரைக்கதையில், கதையில் கொடுத்துள்ள வித்தியாசத்திற்குப் பாராட்டினாலும், படத்தில் உள்ள அதிகப்படியான ஆபாசத்திற்கும், இரட்டை அர்த்த வசனங்களுக்கும், புகை பிடிக்கும் காட்சிகளுக்கும் நிச்சயம் கண்டனம் தெரிவித்தே ஆக வேண்டும். அவை இல்லாமல் கூட இந்தப் படத்தை உருவாக்கியிருக்கலாமே…

சாம் ஜோன்ஸ், அதுல்யா இருவரும் காதலர்கள். ஆனால், ஒரு பெண்ணுடன் சாம் செல்பி எடுத்து பேஸ்புக்கில் போட்டதற்காக பிரிந்துவிடலாம் என அதுல்யா முடிவெடுக்கிறார். சாம் எத்தனை முறை தொடர்பு கொண்டாலும் அதுல்யா விலகியே செல்கிறார். காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் சாம் நண்பனாகவும், அண்ணனாகவும் இருக்கும் சமுத்திரக்கனியிடம் ஆலோசனை கேட்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அதுல்யாவைக் கொலை செய்ய வேண்டும் என்கிறார் சாம். அப்படிக் கொலை செய்தால், அதை போலீஸ் விசாரித்து கைது செய்தால் என்ற எண்ணத்தில் கொலையை எப்படி செய்து விசாரணையில் இருந்து தப்பிப்பது என ஒரு ‘கற்பனை ரிகர்சல்’ நடத்திப் பார்க்க முடிவு செய்கிறார்கள். அதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அந்த ‘கற்பனை ரிகர்சல்’ கதாபாத்திரங்களில் கூட சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி இருவரும் நடித்திருப்பதுதான் படத்தின் முக்கிய வித்தியாசம். இருந்தாலும் அந்தக் கதாபாத்திரங்களையும், விசாரணையையும் உன்னிப்பாகக் கவனித்தால்தான் படமும் புரியும். சாம் ஜோன்ஸ் புதுமுக நடிகர் போல இல்லாமல் அனுபவசாலியாக நடித்திருக்கிறார். சமுத்திரக்கனி கிடைக்கும் இடங்களில் எல்லாம் அட்வைஸ் சொல்லி யோசிக்க வைக்கிறார்.

அதுல்யா, இந்தப் படத்தில் இப்படி கிளாமராக நடித்திருக்கிறாரே என ஆச்சரியப்படவும், அதிர்ச்சியடையவும் வைக்கிறார். அதுல்யா, கொஞ்சம் அடக்கம் வேணும்யா என சொல்ல வைக்கிறார். சமுத்திரக்கனியியுடன் ‘லிவிங் டு கெதர்’ வாழ்க்கை வாழும் ரோஷினிக்கும் இது முதல் படம். அடுத்தடுத்து வாய்ப்புகள் வரலாம்.

பாலசரவணன் சாதாரணமாகவே கொஞ்சம் டபுள் மீனிங்கில் பேசுவார். இந்தப் படத்தில் அது இன்னும் அதிகமாகவே உள்ளது.

சாம் டி ராஜ் இசையில் பிரேக் அப் பாடல்கள், Male, Female வெர்ஷன் கவனிக்க வைக்கும்.

இந்தக் காலத்தில் இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என பல விஷயங்களை நெகட்டிவ்வாகவே காட்டியிருக்கிறார் இயக்குனர் துரை. குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான படத்தைக் கொடுத்தவரா இப்படி ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் என ஆச்சரியப்பட வைக்கிறார்.

ஏ…….மா(ற்ற)லி…

SHARE: